ஹோர்முஸ் நீரிணைக் கட்டுப்பாடு ஈரானுக்கு..! ஓமானுடன் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஐந்து மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஓமானுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒப்பந்தத்தின் கீழ், ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் மீதான கட்டுப்பாட்டை ஈரானுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
ஹோர்முஸ் நீரிணை
வணிகக் கப்பல்கள் ஈரானிய பிராந்திய கடற்பரப்பு ஊடாகவே பயணிக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளதுடன், இந்த பேச்சுவார்த்தைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இருப்பினும், உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான இந்தப் பாதையின் கட்டுப்பாட்டை ஈரான் ஏற்றுக்கொள்வதை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதேவேளை, தமது நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்தால், வளைகுடா பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் முக்கிய எரிபொருள் உள்கட்டமைப்புகள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர தூதரக வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்த முன்மொழிவு வளைகுடா பிராந்தியத்தின் அதிகார சமநிலையை ஈரானுக்கு சாதகமாக மாற்றக்கூடும் என பிராந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.