உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்: 65 மில்லியன்களை செலுத்தாத அதிகாரிக்கு எதிராக அவமதிப்பு வழக்கு
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையையும் வழங்கத் தவறியதற்காக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர் எஸ்.துரைராஜா, நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், நீதியரசர் சிரான் குணரத்ன, நீதியரசர் குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் நீதியரசர் அச்சல வெங்கப்புலி ஆகியோர் நிலந்த ஜயவர்தனவை எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்பியுள்ளனர்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட பிரதி மன்றாடியார் நாயகம், திலீப பீரிஸ், பிரதிவாதிகள் நட்டஈடு அலுவலகத்திற்கு செலுத்திய கொடுப்பனவுகளின் விபரங்கள் மற்றும் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
எனினும், நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர, தனது கட்சிக்காரர் இதுவரை மொத்தம் 75 மில்லியன் ரூபாய் தொகையில் 10 மில்லியன் ரூபாய் தொகையை செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
தனது வாடிக்கையாளர் தற்போது கட்டாய விடுப்பில் இருப்பதாகவும், மீதமுள்ள தொகையை செலுத்துவது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இந்த சிரமம் வேண்டுமென்றே கூறப்பட்டதல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இரு தரப்பினரின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர தீர்மானித்ததுடன், நிலந்த ஜயவர்தனவை ஒக்டோபர் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.
இழப்பீடு
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை செலுத்தியுள்ளனர்.
இதன்படி, கடமையை தவறவிட்டமைக்காக, மைத்ரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாய்களும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு சட்டப்பூர்வ கடமைகளைச் செய்யத் தவறியதற்காக தலா 75 மில்லியன் ரூபாய் இழப்பீடு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாய்கள் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு 10 மில்லியன் ரூபாய்களை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |