மன்னார் காற்றாலைகளை அமைக்கும் பணி தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு
மன்னார் நகரப் பகுதியில் நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட மின் உற்பத்திக்கான 14 காற்றாலைகளையும் திட்டமிட்டபடி அமைக்கும் பணிகளைத் தடை இன்றி தொடரும்படி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.
அது தொடர்பில் அரசினதும் ஜனாதிபதியினதும் தீர்மானம் அடங்கிய அறிவுறுத்தல் பெரும்பாலும் இன்று மன்னார் செயலகத்துக்குக் கிடைக்கும் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
மன்னார் காற்றாலை
இந்தக் காற்றாலைகளை அமைக்கும் பணிக்கு எதிராக மன்னாரில் பொதுமக்கள் மட்டத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஜனாதிபதியே நேரடியாகப் பேச்சு நடத்தி விடயம் குறித்து முடிவெடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசமும் அவரினால் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் காற்றாலை அமைப்புக்கு எதிராகத் தொடர்ந்து நேற்று 51 ஆவது நாளாகப் பொது அமைப்புகள் தமது எதிர்ப்பைக் காட்டிப் போராடி வந்தன. இந்தநிலையில் திட்டமிட்டபடி 14 காற்றாலைகளையும் அமைக்கும் பணியை முன்னெடுக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.
நியூயோக்கில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக நாட்டை விட்டு புறப்படும் முன்னர் ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியிருந்தார் எனத் தெரியவருகின்றது.
சௌத்பார், தாழ்வுப்பாடு பகுதிகளில் நான்கு காற்றாலைகளும், பொன்னையன் குடியிருப்பு முதல் பேசாலை வரை உள்ள பகுதியில் 10 காற்றாலைகளும் அமைக்கப்பட இருக்கின்றன.
அநுர அரசு
இவற்றில் நான்கு காற்றாலைகள் சீலெக்ஸ் நிறுவனத்தினாலும், ஏனைய பத்து காற்றாலைகளும் ஹெலீஸ் நிறுவனத்தினாலும் அமைக்கப்பட இருக்கின்றன.
இலங்கையில் அமைக்கப்படும் இத்தகைய ரக காற்றாலைகளில் அதிக கூடிய மின்னை உற்பத்தி செய்யக்கூடிய, அதிநவீன காற்றாலைகள் இந்தப் பதினான்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை ஒவ்வொன்றும் ஐந்து மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் காற்றாலைகள் திட்டமிட்டபடி அமைக்கப்படும் என்ற முடிவை அரசு எடுத்துள்ளதால், அதனை ஆட்சேபித்து வரும் பொதுத் தரப்புகள் இது விடயத்தில் அடுத்த கட்டமாக என்ன முடிவை எடுப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



