கஸ்ஸப தேரருக்கு எதிராக ஜேவிபி பொலிஸில் முறைப்பாடு!
கஸ்ஸப தேரருக்கு எதிராக ஜே.வி.பி கட்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, இரண்டு கத்திகளுடன் பிடிபட்ட நபர் ஒருவர் பெலவத்தையிலுள்ள ஜேவிபி தலைமையகத்துடன் தொடர்புடையவர் என பலாங்கொட கஸ்ஸப தேரர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த கூற்று குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கோரி, ஜே.வி.பி கட்சி நேற்றயை தினம் சினமன் கார்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
சினமன் கார்டன்ஸ் பொலிஸில் CIB II 289/237 என்ற குறிப்பு எண்ணின் கீழ் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கத்திகளுடன் பிடிபட்ட நபருக்கும் பெலவத்தையிலுள்ள தமது கட்சி அலுவலகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஜேவிபி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கஸ்ஸப தேரர் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் பொய்யானது என்றும், இது பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்றும் ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜேவிபி தலைமையகத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அடிக்கடி வருகை தருவதால், இந்த தவறான குற்றச்சாட்டால் கட்சியின் தலைமையகத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்றும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ள ஜேவிபி, அது தொடர்பான வீடியோ பதிவுகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.
பொதுமக்களின் அமைதிக்கும் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய வகையிலான இந்த அறிக்கை குறித்து பொலிஸார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஜேவிபி வலியுறுத்தியுள்ளது.