சட்டவிரோதமான கைது நடவடிக்கை : பொலிஸ் அதிகாரிக்கு வழங்கப்பட்ட இழப்பீடு
சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவிக்கு இரண்டு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸாருக்கு எதிராக அதே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அநீதியான முறை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பனாப்பிட்டிய என்ற பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில் தன்னையும் மனைவியையும் தன்னிச்சையாக கைது செய்து அநீதியான முறையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நான்கு பேரும் துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், கொஸ்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸாரும் பொலிஸ் கான்ஸ்டபிளின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக வழக்கின் விசாரணை முடிவில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இழப்பீட்டுத் தொகை
மேலும், துன்புறுத்தலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவிக்கு தலா இரண்டு மில்லியன் ரூபா வீதம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் தொகையை நான்கு பொலிஸாரும் அவர்களது தனிப்பட்ட நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் மற்றும் அவரது மனைவிக்கு தலா 25,000 ரூபா வீதம் செலுத்துமாறும் அரசாங்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தொடுகுறித்த தீர்ப்பின் நகலை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பி, எதிர் மனுதாரர்களுக்கு எதிராக உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |