யாழில் தேர்தல் கால வன்முறைகளை தடுக்க குழு அமைக்க தீர்மானம்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
யாழ். பொலிஸ் நிலைய மாநாட்டு மன்டபத்தில் நேற்று புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கும் முகமாக குழு ஒன்று அமைக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 51 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.
சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 44 உறுப்பினர்கள் முன்னிலை
இந்தக் குழுவில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சார்பில் 7 உறுப்பினர்களும், தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 44 உறுப்பினர்களும் என மொத்தமாக 51 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.
மேலும், தேர்தல் பிரசார இடங்களுக்கு அனுமதி கோரல், ஒலிபெருக்கி சாதனங்களைப் பயண்படுத்தும் கால அளவு தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சிறீமோகன், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |