கெஹல்பத்தர பத்மேவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்யுமாறு உத்தரவு
பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் கோரலகமகே மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் கெஹல்பத்தர பத்மேவின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்மே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களது வங்கிக் கணக்கு விபரங்களை விசாரணைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு டி சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கெஹல்பத்தர பத்மே தற்பொழுது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இந்த விசாரணைகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் இன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.
இந்த சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரின் மனைவியினது வாகனத்தை விடுவிக்குமாறு சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
பிரதான நீதவானின் முன்னிலையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் சந்தேக நபரான கெஹல் பத்தர பத்மேவின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.