முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தேசம் எங்கும் நினைவுகூர்வோம்: சரவணபவன் அறைகூவல்
முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ஒரு வாரத்துக்கு நாம் களியாட்டங்களைத் தவிர்த்து, குறுகிய நிலப்பரப்புக்குள் கொன்று குவிக்கப்பட்ட எங்கள் உடன்பிறப்புக்களுக்காக ஆத்மார்த்தமாக வழிபடுவோம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் (E. Saravanapavan) அழைப்பு விடுத்துள்ளார்.
ஈழத் தமிழர் வாழ்வில் பெருந்துயர் தோய்ந்த மறக்கவே முடியாத பெரும் வலியைத் தந்து சென்ற முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தின் நினைவு நாள் இன்று (12.05.2024) ஆரம்பமாகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நீதியின் அச்சாணியில் சுழலாத இந்த உலகம், அதிகாரமற்ற தமிழர்களை அடக்கி ஒடுக்கி அணுவணுவாய் கொல்வதை வேடிக்கை பார்த்த அந்தப் பெருந்துயரம் அரங்கேறி இன்றுடன் 15ஆண்டுகள் நிறைவுறுகின்றன.
பச்சிளங் குழந்தைகளையும், பசியால் பல மணிநேரம் கால்கடுக்க கஞ்சிக்காக காத்திருந்த சிறுவர்களையும் ஈவு இரக்கமின்றி கொத்துக்குண்டுகளை வீசிக்கொன்றொழித்த சிங்கள அரசுக்கு இன்றும் செங்கம்பளம் வீசிக்கொண்டிருக்கும் சர்வதேசத்திடம் தான் நாமும் எமக்கான நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
பூகோள பந்தின் அரசியல் சடுகுடுதனங்களும், சகுனி ஆட்டங்களும் எங்களின் நீதிக்கான பாதையை எங்காவது திறப்பதற்காக வாய்ப்பை ஏற்படுத்தித்தராதா என்ற அங்கலாய்ப்பிலேயே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கின்றோம்.
தாய்நிலம் இன்று சிங்கள ஆட்சியாளர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. அந்நியர்களால் பங்குபிரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அடுத்த தலைமுறை தாய்நிலத்திலிருந்து தப்பியோடத்துடிக்கின்றது.
எங்கள் பேரவலங்களையும் வலிகளையும் மறக்கச்செய்கின்ற நிகழ்ச்சி நிரல் இளம் சமூகத்திடையே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
எம்மைச் சூழ்ந்திருக்கும் இந்தச் சவால்களையும் தாண்டியே நீதிக்கான பயணத்தை தொடரவேண்டியிருக்கின்றது.
15 ஆண்டுகளுக்கு முன்னர் மடிந்த அந்த ஆன்மாக்கள், நாங்கள் நீதியைப்பெற்றுத் தருவோம் என்று இன்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றன. அதற்காக காத்திருக்கின்றன.
அந்த ஆன்மாக்களின் நினைவுகளுக்கு உயிர்கொடுக்க நாம் ஆத்மார்த்தமாக உழைப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
