கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு அமைச்சரின் அவசர அறிவுறுத்தல்
கொழும்பின் மொத்தம் 469 கிலோமீற்றர் நீளமான கால்வாய் மற்றும் வடிகால் வலையமைப்பில், 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 20 கிலோமீற்றர் மாத்திரமே அதிக மழைவீழ்ச்சியைத் தாங்கும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு, ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்களுக்குள் 129 முதல் 150 மில்லிமீற்றர் வரை பெய்த அதீத மழையே முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பின் தற்போதைய வடிகால் கட்டமைப்பு மணித்தியாலத்திற்கு 30 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சியைத் தாங்கக்கூடிய வடிகால்
எனினும், புனரமைக்கப்பட்ட 20 கிலோ மீட்டர் பகுதிகள் மணித்தியாலத்திற்கு 102 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சியைத் தாங்கக்கூடியவை எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால், புனரமைக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சில மணித்தியாலங்களுக்குள் வடிந்துவிடுவதாகவும், முன்னர் பல நாட்கள் நீர் தேங்கி நின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனுமதியற்ற கட்டடங்கள், முறையற்ற நகர அபிவிருத்தி மற்றும் கழிவுகளை வடிகால்களில் கொட்டுதல் ஆகியவையும் வெள்ளப்பெருக்குக்கு காரணமாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இழப்பீட்டுத் தொகை
தேசிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள நோரிஸ் கால்வாயைச் சுத்தப்படுத்தும் பணிகளுக்காக, இன்னும் எட்டு குடும்பங்கள் இடம்பெயர வேண்டியுள்ளதாகவும், அவர்களுக்காக 11 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நகர வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவது கொழும்பு மாநகர சபையின் பொறுப்பு மட்டுமல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர், ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் விரைவான நடவடிக்கைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், வெள்ள அபாயத்தைக் குறைக்க பொதுமக்கள் மக்காத கழிவுகளை கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.