பாரியளவு போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கிய கொழும்பு வர்த்தகர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் பொதியுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் விமான நிலைய வளாகத்திலேயே அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், ரத்மலானை, ஜெயமாவத்தையைச் சேர்ந்த 34 வயது தொழிலதிபர் ஆவார்.
அவர் ஓமானிலிருந்து கத்தார் நாட்டின் தோஹாவிற்கு போதைப்பொருள் பொதியுடன் வந்தடைந்து, அங்கிருந்து நேற்று(29.09.2026) இரவு சுமார் 7.30 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

சந்தேக நபர் கொண்டு வந்த சூட்கேஸில், 3 கிலோகிராம் 994 கிராம் எடையுள்ள போதைப்பொருள், 10 பொட்டலங்கள், பிஸ்கட்கள் மற்றும் சொக்லேட்டுகளுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று (30.09.2026) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.