உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சதித்திட்டக்காரர்களை உடனடியாக கண்டறியவும்..! கொழும்பு பேராயர் இல்லம் வலியுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும், அதற்கு உதவி புரிந்தவர்களுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கொழும்பு பேராயர் இல்லம் தனது மனநிறைவை வெளிப்படுத்தியுள்ளது.
அதேவேளை, இந்த நீதி விசாரணைகள் மற்றும் தீர்ப்புகள் முழுமையான நீதியை இன்னும் வழங்கவில்லை என்ற கவலையையும் கொழும்பு பேராயர் இல்லம் வெளிப்படுத்தியுள்ளது.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கொழும்பு பேராயர் இல்லத்தின் வெகுஜன தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ, தற்போதைய தீர்ப்பானது தாக்குதலுக்கு உதவிய மற்றும் சதி செய்தோரில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
இது முழுமையான நீதிக்கான தேடலில் ஒரு ஆரம்ப கட்டமே தவிர, முடிவு அல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியில் இருந்து கொண்டு திரைமறைவில் காய்களை நகர்த்திய பிரதான சதித்திட்டக்காரர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் தற்போது உள்ளது.
பிரதான சூத்திரதாரியின் நிலை..
உண்மையான மூளையாகச் செயற்பட்டவர்கள் அடையாளம் காணப்படாத வரை பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆன்ம அமைதியும் முழுமையான நீதியும் கிடைக்காது என்பதே கத்தோலிக்க திருச்சபையின் நிலையாகும்.

இந்தக் கொடூர சம்பவத்துக்கு நீதி கோரும் பணியில் கத்தோலிக்க திருச்சபையும் பாதிக்கப்பட்ட மக்களும் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது.
குறிப்பாக, விசாரணைகள் மமதைகளில் சிக்காமல் அல்லது திசைதிருப்பப்படாமல் நேர்மையான முறையில் தொடர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
எனவே, நீதித்துறையின் தற்போதைய தீர்ப்புகளை வரவேற்கும் அதேவேளையில், இதன் தொடர்ச்சியாகப் பிரதான குற்றவாளிகளை முழுமையாக வெளிக்கொணர்வதற்குச் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளும் அரசும் தொடர்ந்தும் உரிய துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.