கோவை வெடிவிபத்து! உயிரிழந்த நபர் தொடர்பில் வெளியான பின்னணி
இந்தியா - கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் அதிகாலை காரில் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியாகிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்ததுடன், எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ஜமேஷா முபின் பயன்படுத்திய கார் சுமார் 10 பேரிடம் கை மாறியுள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
வெடி விபத்தின் எதிரொலி
இந்த சூழலில் இந்த வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை வெடி விபத்து விசாரணை குறித்து தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த விபத்தில் உயிரிழந்தவர் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
வெடிகுண்டு விசாரணை
இவர் சஹ்ரான் ஹாசிமுடன் முகப்புத்தகத்தில் உரையாடியுள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை,சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரும் 1998 ஆம் ஆண்டு கோவை வெடிகுண்டு சம்பவத்துடன்,தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே,சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தென்னிந்தியாவில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு
குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டம்
இருந்ததா என்பது குறித்து இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகம்
வெளியிட்டுள்ளது.