வடக்கில் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தென்னை முக்கோணம் (Photos)
நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமான வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த தென்னம் பிள்ளைகளை நாட்டும் நிகழ்வு நேற்று (18.11.2023) கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய , ஒரு இலட்சம் தென்னம் பிள்ளைகளை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய 03 மாவட்டங்களுடன், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கி வடக்கு தென்னை முக்கோண வலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் 03 மாதங்களுக்குள் நான்கு இலட்சத்து 50 ஆயிரம் தென்னம் பிள்ளைகளை பயிர்செய்கை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் முன்னேடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்வாதாரம்
இதன்போது, வடக்கில் மீள்குடியேற்றத்தின் பின்னர் வழங்கப்பட்ட தென்னம் பிள்ளைகள் இன்று மக்களின் வாழ்வாதாரமாக மாறியுள்ளதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல இன்று ஆரம்பிக்கப்படும் இந்த திட்டத்தினூடாக வழங்கப்படும் தென்னம் பிள்ளைகள், வட மாகாணத்தில் நலிவுற்றிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எழுந்து நிற்கும் என ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார். எவ்வாறாயினும் தென்னை பயிர் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் நன்கறிந்துள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, நட்புசார் விவசாயத்தை விஸ்தரிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்றை அறிமுகபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் கூறினார். வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தென்னை முக்கோண வலயத்தை வட மாகாணத்தில் ஆரம்பிக்க ஆலோசனை வழங்கிய ஜனாதிபதிக்கு இதன்போது வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது நன்றிகளை தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர் ஏ.வீ.கே.மாதவி ஹேரத், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan