செம்பியன்பற்றில் கடற்றொழிலாளர்களிடையே முறுகல்! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடற்றொழிலாளர்களிடையே வன்முறை வெடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல்
இதனை மீறி அங்கு சிலர் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று(13) நண்பகல் 12.00 மணியளவில் செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு மதுபோதையில் தடிகளுடன் கரைவலை வாடிகளுக்கு சென்ற கும்பல் அங்கிருந்த கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த கடற்றொழிலாளர் ஒருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








