இலங்கையின் அரசியல் தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்று சேர வேண்டும்:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், இளைய தலைமுறை தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்கவும் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்று சேர வேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனே வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
இந்த மேடை வெறுப்பு, கோபம், பொறாமை மற்றும் பேராசை இல்லாததாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
ரணில் விக்ரமசிங்க தலைமை
இந்த முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்க முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.
மேலும் நாட்டின் எதிர்காலத்திற்காக தேசியத் தலைமை ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கட்சித் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட புதிய முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்தும் வஜிர அபேவர்தனே கவலை தெரிவித்ததுடன் பலர் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை என்றும், கைபேசிகளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்றும் கூறினார்.




