இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா
இலங்கை அரசியலில் ஈழத்தமிழர்கள் தமக்குரிய இறைமையை தேர்தல்களில் வாக்களிப்பதன் மூலம் தாம் விரும்பிய பிரதிநிதிகளுக்கூடாக இலங்கை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கின்றனர்.
ஆயினும் அந்த நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்களினால் ஏதாவது ஒரு பிரேரணையோ , அல்லது மனுவையோ முன்வைத்து வெற்றிபெற முடியாது என்பதுவே கடந்த 76 ஆண்டுகால வரலாறாக எம் முன்னே விரிந்து கிடக்கிறது.
இந்த நிலையில் சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் எவ்வாறு கையாள்வது? அதற்கான வாய்ப்புகள் உண்டா? ஆம் நிச்சயமாக உண்டு. அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்? என்பதை பற்றியே இந்த பந்தி ஆராய முற்படுகிறது.
இனப்படுகொலை
இலங்கையின் வரலாற்றில் இலங்கை மக்கள் அவ்வப்போது சிற்சிலகாலம் ஒரு நிர்வாக அலகின் கீழ் ஆளப்பட்டிருக்கிறனர். ஆயினும் இலங்கையின் 2500 ஆண்டுகளுக்கு மேலான அரச கட்டுமானத்தின் முழுநீள வரலாற்றில் ஒரு விகிதக் காலப்பகுதியேனும் ஒரே நிர்வாக அலகின் கீழ் இருந்தது கிடையாது.
இந்நிலையில் 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ்த்தான் இலங்கையின் அனைத்து மக்களும் ஒரு நிர்வாக அலகிற்குக்கீழ் 1833 கோல்புறூக் கமரன் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டனர்.
வரலாற்று ரீதியாக தனியான அரசியல் நிர்வாகிகளினாலும் மன்னர்களினாலும் நிர்வாக முறைகளினாலும் ஆளப்பட்ட சிங்கள, தமிழ் இனங்களை ஒரு ஆட்சியின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை விழுங்கும் அல்லது கரைக்கும் ஒரு அரசியல் நடைமுறையை பிரித்தானிய அரசியல் நிர்வாகமே தோற்றுவித்தது.
இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் தமிழர்கள் சிறுபான்மையினரே அன்றி அவர்கள் கரைந்து போகக்கூடிய மக்கள் கூட்டம் அல்ல. வரலாற்று ரீதியாக பாரம்பரிய தாயகம், பொதுமொழி, பொது பண்பாடு, பொது பொருளாதாரம், அரசியல் முதிர்ச்சி, சர்வதேச உறவுகள் என்ற அடிப்படைக் கட்டுமானங்களை கொண்ட இலங்கைத் தீவின் வட-கிழக்கு நிலப்பரப்பில் தொடர்ச்சி குன்றாமல் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் இலங்கை தீவில் பல்லாயிரம் ஆண்டுகளாக அரசமைத்து வாழ்ந்திருக்கிறார்கள்.
இத்தகைய தமிழ்த் தேசிய இனம் தன்னைத்தானே ஆள்வதற்கும், தனக்கான அரசியல் தலைவியை நிர்ணயிப்பதற்குமான உரிமையும், உரித்தும் உடையவர்கள். இத்தகைய தமிழ்த் தேசிய இனம் அவர்களுடைய அனுமதியின்றியே இலங்கைத் தீவின் ஒரு நிர்வாக அலகின்கீழ் கொண்டுவரப்பட்டமை என்பது பிரித்தானிய ஏகாதிபத்திய அரசின் நலங்களுக்காக தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் இனநாயக அரசியல் முறைக்குள் தள்ளி விட்டிருக்கிறது.
இந்த அடிப்படையில்த்தான் 1931ம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலம் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் தலை எண்ணும் ஜனநாயகம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தலை எண்ணும் ஜனநாயகம் பெரும்பான்மை ஜனநாயகம் என்று அரசியல் மொழியில் அழைக்கப்பட்டாலும் அது இலங்கைத் தீவின் நடைமுறையில் இனநாயகமாகவே வடிவம் பெற்றது.
இந்த இனநாயக அரசியல் என்பது இலங்கையில் சிறுபான்மையினர் மீது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியலமைப்பாகவும், அரச கட்டுமானமாகவும், அரசின் செல்போக்காகவும் உருப்பெற்று நடைமுறையில் இனப்படுகொலையை சட்ட வலுப்பெற்றதாக உருத்திரண்டுள்ளது. இதனைடுத்து 1947 ஆம் ஆண்டு தோல்பரி அரசியல் யாப்பு இந்த இனநாயகத்தை மேலும் வலுப்படுத்தியது.
ஆயினும் பிரித்தானியர் தமது மேற்குலக சிந்தனையில் இருந்து கொண்டு மேற்குலக சிந்தனையில் கற்றவர்களுக்கு ஊடாக இந்த அரசியல் யாப்பை வரைந்தது. இதில் சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கான 29 ஆவது சரத்து இணைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அந்த 29 ஆவது சரத்து என்பது எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்களையோ அல்லது இந்து, இஸ்லாமிய மக்களுக்காகவோ உருவாக்கப்படவில்லை.
அரசியல் யாப்பு
மாறாக அது இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அங்கிலிகான் கிறிஸ்தவர்களை பாதுகாக்கவும், அவர்களின் மூலம் இலங்கைத் தீவை ஆங்கிலேயரின் மேலாண்மைக்குள் அல்லது செல்வாக்கு மண்டலத்துக்குள் தொடர்ந்து வைத்திருப்பதற்குமாகவே சோல்பரி பிரபு 29 ஆவது சரத்தை சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற கவசத்தை இட்டு அரசியல் யாப்பில் புகுத்தி இருக்கிறார் என்று சோல்பரி அரசியல் யாப்பை வியாக்கியானப்படுத்துகின்ற தமிழ் பேராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.அதுவே உண்மையும்கூட என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.
ஆனால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்று 29வது சரத்துக்கு மாறாக எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய தமிழர்களுக்கு அவர்கள் சொறிந்து வாழும் தாயக நிலப் பிரதேசத்திற்கான மாற்றப்பட முடியாத, தனியான, தனித்துவமான ஒரு சமஸ்டி முறையையோ, அல்லது அரை சமஸ்டி முறையோ, அல்லது பிரிந்து செல்ல முடியாத அதே நேரம் ஒருமித்த நாடாக இருக்கக்கூடிய 1833 க்கு முன்னான காலத்தில் ஒல்லாந்தர்கள் தமிழர்களையும், சிங்களவர்களையும் நிர்வகித்த நிர்வாக ஒழுங்கு முறைமையை ஏற்படுத்தியிருந்திருந்தால் சோல்பெரி யாப்பு வெற்றிகரமானதாக அமைந்திருக்க வாய்ப்புண்டு.
அது இங்கு பெரும்பான்மை வாதம் தொழில் படுவதற்கு தடையாக இருந்திருக்கும். மேலும் பிரித்தானிய நாடாளுமன்ற முறைக்கு ஒத்ததான மேற்சபை கீழ்ச்சபை என்ற இரண்டை உருவாக்கி அந்த மேற்சபை எனப்படுகின்ற செனட் சபை என்பது சட்டசபையாகத் தொழிற்படும் கீழ் சபையில் ஏதேனும் தவறான சட்டங்கள் உருவாவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று சொன்னாலும் அந்த செனட் சபையால் ஒரு சட்டத்தை ஒரு மாதகாலம் வரைக்குமே தடுத்து வைத்திருக்க முடியும்.
அவ்வாறு ஒரு தவறான சட்டத்தை ஒரு மாதம் காலம் வரை தள்ளி வைக்கின்ற அல்லது தடுத்து நிறுத்துகின்ற சபையைக் கூட சிங்கள தேசத்தின் இனநாயக அரசியலில் விரும்பாமைதான் 1970ல் அது ஒழிக்கப்பட்டது.1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பில் செனட் சபை மாத்திரமல்ல 29ஆவது சரத்தும் காணாமல் ஆக்கப்பட்டுவிட்டது. அத்தோடு அங்கிலிகான் கிறிஸ்தவர்கள் அரசியல் தலைவர்களாக மாறுவதற்கு பௌத்த மதத்திற்கு மாறினார்.
அவ்வாறு மாறித்தான் அரசுகட்டில் ஏறியதையும், சிங்கள மக்கள் மத்தியில் முதன்மை பெற்றதையும் அநகாரிக தர்மபாலவிலிருந்து ரணில் விக்ரமசிங்க வரையான வரலாறு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இனப்படுகொலையே ஜனநாயகம் என்றும், பௌத்த மதமும், சிங்கள மொழி பேசும் மக்கள் மாத்திரமே இத்தீவுக்கு உரித்து உடையவர்கள் என்று வரையறுக்கின்ற மகாவம்ச கருத்தியலே சிங்கள மக்களின் கருத்து மண்டலமாக, பொதுப் புத்தியாக, பொதுநடைமுயையாக இன்று கட்டமைக்கப்பட்டு விட்டது.
சிங்கள மக்களின் இத்தகைய இனப்படுகொலை கருத்து மண்டலத்தை வெறும் நாடாளுமன்ற உரைகளினாலோ, அல்லது சிங்கள மக்களிடம் சென்று நியாயம் கேட்பதனாலோ மாற்றிவிட முடியாது. தவறை சரி என்று நம்பி அதுவே ஜனநாயகம் என்றும், தர்மம் என்றும் ஜனநாயக தர்மபோதனை செய்யும் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற இந்த தவறான மனித உரிமைக்கு எதிரான கருத்து மண்டலத்தை மாற்றுவது என்பது இயலாத காரியம்.
தமிழ் மக்கள்
இத்தகைய அரசியல் சூழமைவில் இலங்கைத்தீவின் அரசியலில் தமிழ் மக்கள் எத்தகைய தாக்கத்தை செலுத்த முடியும்? இன்று இருக்கின்ற தலை எண்ணும் ஜனநாயக நாடாளுமன்றத்தில் 10 விகித ஆசனங்களைகூட பெற முடியாத ஈழத்தமிழர்கள் ஒரு சட்டத்தையோ அல்லது ஒரு மனுவையோ நாடாளுமன்றத்தில் உருவாக்கவோ, சமர்ப்பிக்கவோ முடியாது. கடந்த 76 ஆண்டுகளில் எஸ்ஜேவி செல்வநாயகம் அவர்களினால் ஒரு வெள்ளை அறிக்கையை மாத்திரமே நாடாளுமன்றத்தில் வாசிக்க முடிந்தது.
என்பதிலிருந்து இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்ற அரசியலுக்குள்ளால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், நாடாளுமன்றத்தில் 14மணித்தியாலங்கள் பேசியும், சட்ட வியாக்கியானம் செய்தும், கடர்ச்சித்து பேசியும், எச்சரிக்கை விட்டும், போராட்டம் வெடிக்கும் என வாயால் வடை சுட்டும் எதையும் சாதிக்க முடியவில்லை.இந்த நிலையில் இன்று இருக்கின்ற அரசியல் யாப்புக்குள்ளால் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்கள் ஏதாவது ஒரு அரசியல் கிளர்ச்சியை உருவாக்க முடியுமா என்றால் ஆம் முடியும்.
அதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் எனப்படுகின்ற இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு போட்டோ போட்டியில் இருக்கின்றவர்களுக்கும் மனமாற்றம் தேவையாக உள்ளது. அந்த மனமாற்றம் எந்த சுயநலமும் அற்று தமிழ் மக்களின் நலன் மட்டுமே முதன்மை என்ற மனநிலையில் தொழிற்பட்டால் மாத்திரமே அதனை சாத்தியப்படுத்த முடியும்.
அரசியல் யாப்பில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியல் முறையை பயன்படுத்தி இலங்கை நாடாளுமன்றத்தை அல்லோலகல்லோப்படுத்த முடியும். சிங்கள நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தரங்காக்க முடியும். சிங்கள நாடாளுமன்றத்தை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த முடியும், நாடாளுமன்றத்தை நிர்பந்திக்க முடியும்.
அது எவ்வாறு எனில் இப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வைக்கின்ற தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களுக்குப் பின்னே பட்டியல் முறைமையில் இருப்பவர்களும் தேசிய பட்டியலில் இருப்பவர்களும் ராஜினாமா செய்து விட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகி விடும்.
அந்த நிலையில் இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு இடைத்தேர்தல் இல்லை என்பதனால் குறிப்பிட்ட தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாது போகும்போது நாடாளுமன்றத்தினால் நிவர்த்தி செய்ய முடியாது. அந்த நிலையில் பட்டியல் முறையில் புதிய பட்டியல் ஒன்றை மேற்படி நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்ற கட்சியினர் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.
அவ்வாறு சமர்ப்பிக்கின்ற பட்டியலில் காணாமல் தாக்கப்பட்டவருடைய தாய்மார்கள் மற்றும் போரினால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களை பட்டியலை இட்டு அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் அவர்கள் அங்கு முதலில் ஒரு கோரிக்கையை மாத்திரம் முன்வைத்து நாடாளுமன்றத்துக்குள் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும்.
1) வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான விசாரணையை நடத்த கோருதல். 2) இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்க கோருதல்.
3) அரசியல் கைதிகளை விடுவிக்க கோருதல் 4) முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதி விசாரணை நடத்த கோருதல் 5) இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இடம்பெற்றவாறு காணி, பொலிஸ் அதிகாரத்துடன் கூடிய மாகாண சபையை தீர்வை நடைமுறைப்படுத்தும் படி கோருதல்.
இதில் ஏதேனும் ஒன்றை முன் வைத்து நாடாளுமன்றத்தினுள் தமிழ் பிரதிநிதிகளால் ஒரு போராட்டத்தை, ஒரு போர்க்களத்தை ஏற்படுத்த முடியும் காணாமல் ஆக்கப்பட்டோருடைய தாய்மார்களும் மனைவிமார்களும் தலைவிரி கோலமாக வாயை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு கருப்புக்கொடி ஏந்திபாடி நாடாளுமன்றத்துக்குள் நடமாடுவது என்பது ஒரு போராட்டம் முறையாக நடைமுறைப்படுத்த முடியும்.
இது சிங்கள நாடாளுமன்றத்தை கேள்விக்கு உள்ளாக்கும், நாடாளுமன்றத்தை சரிவர நடத்த முடியாத நிலைக்கு தள்ளும், ஒரு கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்துக்குள் ஒரு போராட்டத்தை நடத்தினால் நிச்சயமாக அந்த கோரிக்கை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
பதவி விலகல்
அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து போராடுவதன் மூலம் நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் வெளிநாட்டு தூதரகங்களின் முன்னாலும் போராட்டங்களை நடத்துவதன் மூலம் இலங்கை அரசை நெருக்கடிக்குள் தள்ள முடியும்.
இத்தகைய போராட்டத்தை நடத்துகின்ற புதிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டவர்கள் ஆறு மாதமும் அல்லது ஒரு வருடங்களோ போராட்டத்தை நடத்திவிட்டு அவர்கள் பதவி விலகல் செய்வதன் மூலம்இன்னும் ஒரு புதிய அணியை நாடாளுமன்றத் கட்டடத்துக்குள் அனுப்பி அடுத்த கட்ட புதியதொரு கோரிக்கை முன்வைத்து போராட்டத்தை தொடர வேண்டும்.
இது தொடர்ச்சியாக நடைபெறுமேயானால் இலங்கை அரசியலில் ஈழத் தமிழர்களுக்கான ஒரு தீர்வை அவர்கள் முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும். அவ்வாறு எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற போது இதே போன்ற இன்னும் ஒரு நடைமுறையை அரசியல் அரங்கிற்கு கொண்டுவர முடியும். அது எவ்வாறெனில் ஒரு குறிப்பிட்ட கட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற போது அந்தத் தேர்தலில் கட்சி தனது கொள்கை பிரகடனமாகவும், யாப்பாகவும் சில வரையறுகளை வரையறுக்க வேண்டும்.
ஒரு தொகுதியில் பெறக்கூடிய அறிகூடிய ஆசனங்களின் எண்ணிக்கையும், தேசிய பட்டியல் எண்ணிக்கையும் இணைத்து தாம் வெற்றி பெற்றால் வெற்றி பெற்றவர்கள் ஒரு வருட காலமே பதவி வகிக்க முடியுமென்றும், ஒரு வருடத்தின் பின்னர் அவர்கள் பதவி விலகல் செய்து பட்டியல் முறைமையில் அடுத்த அணியினர் உள்வாங்கப்படுவார்கள் என்றும் ஒரு தீர்மானத்தை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டால் அந்தத் தேர்தல் தொகுதியில் குறிப்பிட்ட கட்சி அதிகூடிய ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.
அது மட்டுமல்ல அந்த ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உருவாகும் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் என்று சொன்னால் ஒரு வருடத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினர்களை மாற்றி அமைக்க முடியும்.
ஆகவே அங்கு 30 பேர் நாடாளுமன்றம் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்தத் தேர்தல் வியூகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வாக்கு சேகரிக்க முனைந்தால் ஒவ்வொரு தனி நபருக்கும் அதாவது 30 பேர் நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்ற வேட்கையில் தமக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவர்.
இத்தகைய ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் கட்சி அந்தத் தேர்தல் தொகுதியின் முழுமையான ஆசனங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பொது நலன் சார்ந்து தொழிற்படுகிறது தமிழ் மக்கள் அனைவரும் அந்த கட்சிக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இது இலங்கை அரசியலில் தமிழர்களன் ஒரு பெரும் அரசியல் பங்களிப்பாகவும் அமையும். இதை ஒரு புரட்சிகரமான அரசியலாகவும் மாற்றி அமைக்க முடியும்.
தேசிய மக்கள் சக்தி
இப்போது எம்.பி.பி கட்சியினர் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் மற்றும் ஊதியத்தை தங்களுடைய கட்சியின் சார்பிலே பெற்றுக் கொண்டு அந்த நிதியிலிருந்து ஒரு பகுதியை மாத்திரமே தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய செலவினங்களுக்கு வழங்குகின்றனர். இது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் பாதையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே இதற்கு மாற்றாக தமிழ் மக்களும் மேற்குறிப்பிட்ட ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் வியூகத்தை முன்மொழிந்து முன்னெடுத்தால் தமிழ் மக்கள் பெறக்கூடிய அதிகூடிய நாடாளுமன்ற ஆசனங்களை ஒரு கட்சி பெறமுடியும். அதே நேரத்தில் அந்தக் கட்சியினர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து நாடாளுமன்றத்தை கேள்விக்குள்ளாக்கி சிங்களதேசித்தின் அரசியலையும், அதன் ஜனநாயகத்தையும் கேள்விக்குள்ளாக்க முடியும்.
எதிரியை நெருக்கடிக்குள் தள்ளி நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலமே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியுமே அன்றி நாடாளுமன்றத்தில் கத்தி குழரிப்பேசி எதனையும் பெற்றுவிட முடியாது. மேற்குறிப்பிட்ட முறைமையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் பலரை அனுப்புவதற்கான வாய்ப்பு இலங்கை அரசியலமைப்பில் உண்டு.
எனவே சிங்கள தேசத்தின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியலுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் எடுக்கக்கூடிய ஆயுதம் தமிழ் மக்கள் தம்மை தமிழ்த்தேசியக் கட்டுமானத்துக்கு உட்படக்குவதுதான். அதுவே தமிழ் மக்களை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசமாகும். இதனைப் பயன்படுத்தி தமிழ் மக்களை ஒரு குடைக்கீழ் ஐக்கிய படுத்த முடியும். தமிழ் தேசியக் கட்டுமானங்களை கட்டமைப்பு செய்ய முடியும்.
தமிழர் தரப்பில் நாடாளுமன்றம் சார்ந்த நடைமுறை அனுபவத்தையும் தேர்ச்சியையும் பலருக்கு அளிக்க முடியும். அது தமிழ் மக்களின் தலைமைத்துவ பண்பை மேலும் அதிகரிக்கச் செய்யும். அது தமிழ் மக்களின் அரசியலில் ஆளுமை செலுத்தக்கூடிய ஆளுமைகளின் புதிய வரவையும், சிறப்பு தேர்ச்சியையும் வளர்த்தெடுக்கும். தமிழ் தரப்பு தம்மை பலப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாக இது நடைமுறையில் செயல் வடிவம் பெற்றால் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கட்டுமானம் மீண்டும் நிலை நாட்டப்படும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 14 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.




