மியான்மரில் தீவிரமடையும் உள்நாட்டு போர்: முக்கிய நகரம் ஆயுதக்குழு கட்டுப்பாட்டில்
மியான்மரில் அரசு படைகளுக்கு எதிராக போராடும் பழங்குடியின ஆயுதக் குழு முக்கிய நகரை கைப்பற்றி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுதக் குழு மியான்மரின் வடகிழக்கே சீனாவை ஒட்டியுள்ள லாக்காயிங் என்ற முக்கிய நகரை நேற்று (07.1.2024) கைப்பற்றியுள்ளது.
கடந்த பல வாரங்களாக கடுமையான சண்டை நடந்த நிலையில் இராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர போராட்டத்தில் பழங்குடியினர்
மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து 2021 இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு எதிராக நாட்டிலுள்ள பழங்குடியின குழுக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மியான்மரில் அரசு படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ள பழங்குடியின ஆயுதக் குழு வடகிழக்கே சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கிய நகரை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இந்த ஆயுதக் குழு பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது.
சீன பழங்குடியினர்
மியான்மர் இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீனா அதே நேரத்தில் இந்த ஆயுதக் குழுவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த ஆயுதக் குழுவில் இடம்பெற்ற மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி படையில் சீன பழங்குடியினர் அதிகம் உள்ளனர்.
போரை நிறுத்தி, அமைதி பேச்சு நடத்தும்படி சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், அதன் எல்லையை ஒட்டியுள்ள லாக்காயிங் பகுதியை, பழங்குடியின ஆயுதப் படை முழுமையாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |