அமெரிக்காவின் ஆயுத நிறுவனங்களுக்கு தடை விதித்த சீனா
அமெரிக்காவின் 5 ஆயுத நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது.
சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இதற்கு பதிலடியாக தைவானுக்கு ஆயுதங்கள், இராணுவ தளவாடங்கள் விற்பனை செய்த 5 அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீன வெளியுறவு அமைச்சகம்
அந்நாட்டின் பிஏஇ சிஸ்டம்ஸ் லேண்ட் அன்ட் ஆா்மமன்ட்ஸ், அலயன்ட் டெக்சிஸ்டம்ஸ் ஆப்பரேஷன்ஸ், ஏரோவிரான்மென்ட், வையசாட், டேட்டா லிங்க் சொல்யூஷன்ஸ் ஆகிய 5 பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்குத் தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.
மேலும், சீனாவில் உள்ள அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், பிற சொத்துக்கள் ஆகியவை முடக்கப்படும் என்றும், சீனாவில் எந்த நிறுவனங்களும் தனிநபரும் அவற்றுடன் பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒற்றுமை, சட்ட உரிமைகள் மற்றும் சீன மக்களின் நலனை பாதுகாப்பதில் சீன அரசு அசைக்க முடியாத உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |