சாந்தனின் மரணத்தோடு சிதைந்த இந்தியாவின் மீதான நம்பிக்கை!...சிவில் அமைப்புக்கள் ஆதங்கம்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இந்தியாவால் பெற்றுத்தர முடியுமென்ற நம்பிக்கை சாந்தனின் சிறை மரணத்தால் பொய்ப்பித்துள்ளது என வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தின் சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பினால் சாந்தனின் மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வல்வெட்டித்துறைக்கென்று தனிப்பெருமையுண்டு. தீருவிலிற்கு அதனை விட தனித்து பெருமை உண்டு.
தீருவில் மண்
இந்திய இலங்கை கூட்டுச்சதியால் படுகொலை செய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளதும் பின்னராக தளபதி கிட்டு உள்ளிட்ட சக பத்து போராளிகளதும் நினைவுகளை தாங்கி நிற்கின்ற மண் இது.
அக்காலப்பகுதிகளில் அவர்கள் ஞாபகார்த்த நினைவு தூபிகளை நிர்மாணித்த கட்டட ஆச்சாரி தில்லையம்பலம். உதவிக்கு அவரிற்கு நாள் தோறும் சோறு எடுத்து வந்திருந்தவர் அவரது மகன் சுதேந்திரராசா.
ஆம். அந்த தில்லையம்பலத்தின் மகனான சுதேந்திரராசா சாந்தனாக 34 வருடங்களின் பின் அதே தீருவில் வந்திருக்கின்றார். அதே இந்திய - இலங்கை அரசுகளது கூட்டு சதியால் காவு கொள்ளப்பட்ட சாந்தனின் புகழுடல் அவன் நேசித்த மண்ணிற்கு வந்திருக்கின்றது.
அவன் நேசித்த மக்களது கண்ணீரிடையே மக்கள் திரண்டு அஞ்சலித்த நிலையில் தீருவிலிற்கு வந்துள்ளது.
அவனது 34 வருட நீதி கோரிய விடுதலைப்பயணத்தில் துரோகங்களையே இழைத்த தமிழக ஆட்சியாளர்களை தாண்டி குரல் கொடுத்து போராடிய தொப்புள் கொடி உறவுகளின் சார்பில் இங்கு வருகை தந்துள்ள சட்டத்தரணி புகழேந்தி அவர்களை நன்றியுடன் வரவேற்கின்றோம்.
இலவு காத்த கிளிகள்
தொப்புள் கொடி உறவுகளை மீண்டுமொரு முறை நன்றியுடன் கட்டித்தழுவிக்கொள்கின்றோம். இன்னமும் நீதி கிடைக்காமல் போராடிக்கொண்டிருக்கின்ற முருகன் உள்ளிட்ட மூவரது சார்பிலும் வந்துள்ள முருகனின் தாயார் மற்றும் சகோதரர்களையும் அரவணைத்துக்கொள்கின்றோம்.
சாந்தனின் மரணத்திற்கான நீதி கோரும் பயணத்திடையே தொடர்ந்தும் இலங்கை ஆட்சியாளர்களை நம்பி ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இதனை தமிழ் மக்களாகிய நாம் மீள மீள இந்திய அரசிற்கு எச்சரித்துக்கொண்டேயிருக்கிறோம். ஆனாலும் இந்திய ஆட்சியாளர்கள் அதனை செவிமடுக்காது செவிடன் காதில் ஊதிய சங்கு போல மௌனித்திருக்கின்றனர்.
ஆனால் நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். ஆனால், இலவு காத்த கிளிகள் போல காத்திருக்கின்ற எமது அரசியல்வாதிகள் போலவல்ல என்பதை இந்திய ஆட்சியாளர்களிற்கு புரியும்படி சொல்லிவைக்க இச்சந்தர்ப்பத்தில் விரும்புகின்றோம்.
இந்திய ஆட்சியாளர்கள் நினைப்பது போலவல்ல ஈழத்தமிழர்களது மனோநிலை.
அரசியல் தீர்வு
தொப்புகள் கொடி உறவுகளுக்காக நிலைத்திருக்கின்ற நேசம் ஒரு காலத்தில் இந்திய வல்லாதிக்கத்திற்கான நேசமாக இல்லாது மாறி தொப்புள் கொடி உறவுகளுடன் மட்டுமாக தனித்து போகலாம்.
நீடித்து வருகின்ற அரசியல் சூழல் அதனை காண்பித்து நிற்கின்றது. இந்திய பணி நிவாரணங்கள் 30வருடத்திற்கு மேலாக விடுதலைக்காக போராடிய எமது மக்களுக்கு நிச்சயம் சாந்திப்படுத்தப் போவதில்லையென்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழ் மக்களுக்கான அவர்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கதான அரசியல் தீர்வை இந்தியாவால் பெற்றுத்தர முடியுமென்ற நம்பிக்கை இன்னமும் சிறிதேனும் எஞ்சியிருந்தது.
அவை கூட சாந்தனின் சிறை மரணத்தால் பொய்ப்பித்துள்ளது. இன்றைய நாளில் மீண்டுமொரு முறை இந்திய அரசிடம் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
எஞ்சிய மூன்று அரசியல் கைதிகளும் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படவேண்டும். சிறப்பு முகாம்கள் மூடப்பட்டு அனைவரும் வெளியில் அனுமதிக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கான நிரந்தரமானதும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான அரசியல் தீர்விற்கு உதவவேண்டும். முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கான நீதிகோரிய தமிழ் மக்களது விடுதலைப்பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
13ஆவது திருத்தம் போன்ற செத்துப்போன அரசியல் தீர்வை தமிழ் மக்களது தலைகளில் கட்டியடிக்கின்ற 30வருடத்திற்கு முந்திய உத்திகளை கைவிடவேண்டும் என்பவையே அவையாகும் - என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |