இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ள ரணில்
புதிய இணைப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இரண்டாம்இணைப்பு
சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் என எதிர்பா்க்கப்படுகிறது.
கடந்த 25 ஆம் திகதி அவரது சட்டத்தரணிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய அவர் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து அறிக்கை அளிப்பதற்காக அவர் முன்னிலையாகவுள்ளார்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு
புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கு தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து குறித்து, ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலில் அழைப்பு விடுத்திருந்தது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக தாம் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் புத்தாண்டு விடுமுறை காலத்தில் தனது சட்டத்தரணிகள் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதைக் காரணம் காட்டி வேறு திகதியொன்றைக் கோரியிருந்தார். அதன்படி, ஆணைக்குழு அவருக்கு புதிய திகதியை வழங்கியதுடன், இன்று வெள்ளிக்கிழமை (25) மு.ப. 9.30 மணிக்கு ஆணைக்குழு முன்னிலையாகுமாறு கேட்டுக் கொண்டது.
எனினும் அன்றைய தினமும் அவர் ஆணைக்குழுtில் முன்னிலையாகவில்லை.
தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான நிலையான வைப்புத்தொகையை, உரிய முறையில் மீளப் பெற்றதாக கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
சாமர எம்.பி
குறித்த விடயம் தொடர்பில் சாமர எம்.பி. கைது செய்யப்பட்டிருப்பது, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததற்கான பதிலடியா எனவும் முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான ரூபா 1 மில்லியன் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்சாமர சம்பத் தசநாயக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊழல் தொடர்பான மூன்று தனித்தனி வழக்குகள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மார்ச் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2 வழக்குகளிலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருந்தது.
எனினும் மற்றுமொரு வழக்கில் பதுளை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் காரணமாக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.