இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா!
ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் பெரும்பாலும் இலங்கை அரசியலின் ஜனநாயக இயல்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாக அமைகின்றது.
இலங்கை அரச இயந்திரமானது குறைந்தபட்சம் காலத்திற்கு காலம் நீதியான தேர்தல்களை நடாத்துவதனூடாகவே ஜனநாயக விம்பத்தை பாதுகாத்து வருகின்றது. அந்த ஒழுங்கிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருந்தது.
எனினும் நடைமுறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை கையாளும் முறைமை, தேர்தல் மீது நம்பிக்கையீனத்தையும் குழப்பத்தையும் உருவாக்கி வருகின்றது.
ஜே.வி.பி அரசாங்கம்
சுயாதீன செயற்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்களின் செயற்பாடுகளிலும் பொதுவெளியில் நம்பிக்கையீனங்கள் ஏற்பட்டு வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்கு முழு அளவில் அரச இயந்திர பலத்தை இயல்பு நிலையில் பயன்படுத்துவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
இது இலங்கையின் தேர்தல் மீதும் ஜனநாயக பொறிமுறை மீதும் அவநம்பிக்கையை உருவாக்குகிறது. இப்பின்னணி இலங்கையர்களிடையே, சர்வதேச தளத்தில் இடதுசாரி மற்றும் வெகுஜன விம்பங்களுடன் தேர்தலூடாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி சர்வதிகாரத்திற்கு மடைமாற்றப்பட்ட கடந்த கால அனுபவங்கள் சார்ந்த அச்சத்தை உருவாக்குகிறது. இக்கட்டுரை ஜே.வி.பி பரிமாண தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் எதேச்சதிகார போக்கினை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில் ஜனநாயகத்தின் மீள்தன்மை குறித்து உலகளவில் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. நேரடியான இராணுவ ஆட்சிகளாலும், ஜனரஞ்சகவாதிகளாலும் ஜனநாயக இயல்புகள் கேள்விக்குறியாகி உள்ளது.
ஜனநாயக பின்னடைவின் முந்தைய சகாப்தங்கள் இருந்தபோதிலும், தற்போதைய தருணம் தனித்துவமானது. ஜனநாயகத்திற்கான முக்கிய அச்சுறுத்தல் ஆயுதப் படைகளிடமிருந்து அல்ல, மாறாக பொதுவாக ஜனரஞ்சகவாதிகளாலேயே ஏற்பட்டுள்ளது. நீதித்துறை சுயாட்சியை பலவீனப்படுத்தவும், சட்டமன்ற கட்டுப்பாடுகளை மீறவும், பத்திரிகை சுதந்திரங்களை அழிக்கவும், எதிர்க்கட்சி அணிதிரட்டலை பரவலாகத் தடுக்கவும் ஜனரஞ்சகவாதிகள் வெகுஜன ஆதரவைப் பயன்படுத்துகிறார்கள்.
அதேவேளை, ஒரு சில ஜனரஞ்சகவாதிகள் தங்கள் வெகுஜன ஆதரவை முழுமையாகப் பெற்ற தனிநபர்வாத சர்வாதிகார ஆட்சியாக வெற்றிகரமாக மாற்றியுள்ளனர். வெனிசுலா, ஹங்கேரி மற்றும் துருக்கியே ஆகியவற்றில், கணிசமான எண்ணிக்கையிலான ஜனரஞ்சகவாதிகள் தங்கள் வெகுஜன ஆதரவை முழுமையாகப் பெற்ற தனிநபர்வாத சர்வாதிகார ஆட்சியாக வெற்றிகரமாக மாற்றியுள்ளனர்.
ஜனரஞ்சகவாதிகள்
இந்த விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் ஜனரஞ்சகவாதிகள் எவ்வாறு தனிநபர்வாத சர்வாதிகாரத்திற்கு மாறினார்கள் என்ற கேள்வியை இது எழுப்புகிறது. மூலோபாய ரீதியாக, ஜனரஞ்சகவாதிகள் கட்சிகள் மற்றும் பிற இடைநிலை நிறுவனங்களைப் பயன்படுத்தாமல் தங்கள் ஒப்பீட்டளவில் ஒழுங்கமைக்கப்படாத ஆதரவாளர்களை நேரடியாக ஈர்க்கும் தனிப்பட்ட பொதுஜன முன்னணித் தலைவர்கள் என்று புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.
இலங்கையிலும் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை மையப்படுத்தியே அரசியல் அமைகின்றது. குறிப்பாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் தெரிவும் அவ்விம்பத்திலேயே இடம்பெற்றது. அவ்வாறானதொரு நகர்வையே உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் பின்பற்றுவதை அவதானிக்கலாம்.
[SV0FUDWஸ
ஒரு கடுமையான சமூக அல்லது பொருளாதார நெருக்கடி, ஜனரஞ்சகத் தலைவர்கள் 'மீட்பர்கள்' என்று அசாதாரண புகழைப் பெற அனுமதிக்கிறது என்பதனை சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிகாட்டுகின்றார்கள். பின்னர் ஜனரஞ்சகவாதிகள் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் அதிகாரத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி சர்வாதிகார அதிகாரங்களைப் பெறுகின்றார்கள்.
கவர்ச்சிகரமான தலைவர்களாக ஜனரஞ்சகவாதிகள், நெருக்கடி அல்லது மாற்றத்தின் போது அதிகரிக்கும் ஆதிக்கத்திற்காக இல்லாவிட்டாலும், ஒழுங்குக்காக மறைந்திருக்கும் வெகுஜன ஏக்கத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அசாதாரண காலங்கள் ஜனநாயக ஒழுங்கில் விரிசல் ஏற்படுவதற்கான சாத்தியத்தை உருவாக்குவதில், வரலாறு எண்ணற்ற உதாரணங்களை வழங்குகிறது. தலைவர்கள் ஒரு நெருக்கடியின் அழுத்தத்தின் கீழ் நொறுங்குவது போலவே அதிலிருந்து சர்வாதிகாரிகளாக வெளிப்படுவார்கள்.
1933ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடந்த ரீச்ஸ்டாக் தீ விபத்துக்குப் பிறகு அடால்ப் ஹிட்லர் ஆணை அதிகாரங்களை ஏற்றுக்கொண்டது மிகவும் இழிவான உதாரணமாக இருக்கலாம். ஆனால் இந்த செயல்முறை தனித்துவமானது அல்ல. உலகின் நடைமுறையாகவே உள்ளது.
வலதுசாரி அரசியல்
ஹிட்லர் உலக அரசியலில் பொதுவாக இடது மற்றும் வலதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்களால் சர்வதிகாரியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஹிட்லரின் வரலாறு இலங்கையர்களுக்கு ஜே.வி.பி அரசியலை கூர்ந்து கவணிக்க வேண்டிய தேவையை அடையாளப்படுத்தக்கூடியதாகும். முதலாம் உலகப்போரில் ஜேர்மனி, வெர்சாய்ஸ் அமைதி ஒப்பந்தத்தில் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தது.
இப்பின்னணியில் 1930ஆம் ஆண்டின், உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஜேர்மனியையும் நெருக்கடிக்குள் தள்ளியது. வெர்சாய்ஸ் அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போர்க் கடன்களை ஜேர்மனியால் செலுத்த முடியவில்லை. மில்லியன் கணக்கான ஜேர்மானியர்கள் வேலை இழந்தனர். நாடும் ஒரு அரசியல் நெருக்கடியில் இருந்தது. அமைச்சரவைகள் சரிந்து கொண்டிருந்தன.
புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்றதாகத் தோன்றியது. இதுவே ஹிட்லர் தலைமையிலான ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் எழுச்சிக்கு பின்னணியாக இருந்தது. பின்னாளில் இக்கட்சியே உலக சர்வதிகாரத்தின் குறியீடாக 'நாசிசக்கட்சியாக' அடையாளப்படுத்தப்பட்டது.
1920இல் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டபோது, அது ஒரு சிறிய கட்சியாக மட்டுமே இருந்தது. ஆனால் ஹிட்லர் தனது சொற்பொழிவுத் திறமையைப் பயன்படுத்தி மேலும் மேலும் உறுப்பினர்களை ஈர்த்தார்.
அந்தக் கட்சி தீவிர தேசியவாதம் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டது. நவம்பர் 1923இல், ஹிட்லர் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கினார். அது முற்றிலும் தோல்வியடைந்தது. ஹிட்லர் சிறையில் அடைக்கப்பட்டார், நீதிமன்றம் அக்கட்சியை தடை செய்தது. 1924ஆம் ஆண்டின் இறுதியில், ஒப்பீட்டளவில் குறுகிய தண்டனை அனுபவித்த பிறகு ஹிட்லர் விடுவிக்கப்பட்டார்.
தேர்தல்கள்
சோசலிச தொழிலாளர் கட்சியினர் சட்டத்தை கடைப்பிடித்து தேர்தல்கள் மூலம் அதிகாரத்தைப் பெற முயற்சித்தனர். 1920களின் இறுதியில் தொடங்கிய பொருளாதார நெருக்கடியால் அவர்கள் பயனடைந்தனர். அரசாங்கத்தையும் வெர்சாய்ஸ் அமைதி ஒப்பந்தத்தையும் கண்டிக்க நாஜிக்கள் நெருக்கடியைப் பயன்படுத்தினர். அவர்களின் உத்தி பயனுள்ளதாக இருந்தது.
1928தேர்தல்களில், 0.8 மில்லியன் வாக்குகளைப் பெற்றது. 1930இல், எண்ணிக்கை 6.4 மில்லியனாக அதிகரித்தது. பல ஜேர்மானியர்கள் சோசலிச தொழிலாளர் கட்சியினால் ஈர்க்கப்பட்டதற்குக் காரணம் அவர்களின் கட்சித் திட்டம் மட்டுமல்ல. அந்தக் கட்சி வலிமையையும் உயிர்ச்சக்தியையும் வெளிப்படுத்தியது. மேலும், தலைவர்கள் நிறுவப்பட்ட கட்சிகளின் நரைத்த அரசியல்வாதிகளைப் போலல்லாமல், இளமையாக இருந்தனர்.
கூடுதலாக, ஒரு வலிமையான தலைவராக ஹிட்லரின் பிம்பம் மக்களைக் கவர்ந்தது. மக்களை ஒன்றிணைத்து அரசியல் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் தயாராக இருந்தார். தொழிலாளர்கள் அல்லது கத்தோலிக்கர்கள் போன்ற ஒரு குழுவை மட்டும் மையமாகக் கொள்ளாமல், அனைத்து தரப்பு வாக்காளர்கள் மீதும் நாஜிக்கள் கவனம் செலுத்தினர். இதற்கு முன்பு வாக்களிக்காத பலரையும் அவர்கள் ஈர்த்தனர். நவம்பர் 1932இல் கட்சி அதன் உச்சத்தைத் தாண்டியதாகத் தோன்றியது. பொருளாதாரமும் மீண்டு வந்தது.
1933இல் சட்டத்தினூடாக ஆட்சிக்கு வந்த ஹிட்லர் விரைவில் அதிக அதிகாரத்தை கோரினார். நாடாளுமன்றக் கட்டிடமான ரீச்ஸ்டாக்கில் ஏற்பட்ட தீ விபத்து இந்த வளர்ச்சியில் ஒரு முக்கிய தருணமாகும். இத்தீ விபத்தில் சந்தேகத்திற்குரிய தீக்குளித்த டச்சு கம்யூனிஸ்ட் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, 1934இல் ஒரு போலி விசாரணைக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார்.
எந்தவொரு கூட்டாளிகளுக்கான ஆதாரமும் ஒருபோதும் கிடைக்கவில்லை. தீயைக் கண்ட நேரில் கண்ட ஒருவர், 'இது கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் ஆரம்பம், அவர்கள் இப்போது தங்கள் தாக்குதலைத் தொடங்குவார்கள்! ஒரு கணம் கூட இழக்கக்கூடாது!' என்று சந்தேக நபர் கூச்சலிட்டதாகக் கூறினார். அவர் தொடர்வதற்குள், ஹிட்லர் 'இப்போது கருணை காட்டப்படாது. நம் வழியில் நிற்பவர்கள் வெட்டப்படுவார்கள்' என்று எச்சரித்தார். மறுநாள் காலை, ஜனாதிபதி வான் ஹிண்டன்பர்க் ரீச்ஸ்டாக் தீ ஆணையை வெளியிட்டார்.
அது சர்வாதிகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது. ஜேர்மன் மக்களின் சிவில் உரிமைகள் குறைக்கப்பட்டன. கருத்துச் சுதந்திரம் இனி ஒரு விடயமாக இருக்கவில்லை. மேலும் காவல்துறையினர் தன்னிச்சையாக வீடுகளைச் சோதனையிட்டு மக்களைக் கைது செய்ய முடியும். நாஜிக்களின் அரசியல் எதிரிகள் அடிப்படையில் சட்டவிரோதமானவர்களாளார்கள்.
இவ்சர்வதேச அனுபவங்களுடன் இலங்கையின் நடைமுறையை நோக்குவது பொருத்தமான விழிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமையும். குறிப்பாக ஜே.வி.பி-யின் இடதுசாரி விம்பம் மற்றும் கடந்த கால வரலாற்றின் பிரதிபலிப்பை ஜேர்மனியின் ஹிட்லர் தலைமையிலான தேசிய சோசலிச தொழிலாளர் கட்சி பிரதிபலிக்கின்றது.
ஜனாதிபதியின் அறிவிப்பு
அவ்வாறே நாசிக்கள் ஜேர்மனியில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பொருளாதர நெருக்கடி சூழமைவு மற்றும் ஹிட்லரின் வசீகர பிரசார யுக்திகளையும், இலங்கையின் ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான பின்னணயிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நடைமுறை போக்கை பரிசீலிக்க வேண்டி உள்ளது. முதலாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினரால், குறிப்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்ற உயர் அதிகாரத்தில் இருப்பவர்களே தேர்தல் விதிமுறைகள் முழுமையாக மீறி வருகின்றார்கள். தமது தேர்தல் செயற்பாடுகளில் முழுமையாக அரச இயந்திரத்தினை பயன்படுத்தி வருகின்றார்கள்.
முதன்மையானதாக உள்ளூராட்சி நிர்வாகங்களுக்கான நிதி விடுவிப்பு தொடர்பான ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் அறிவிப்பு வெளிப்படையாக அரசாங்கத்தின் சர்வதிகார நிலைப்பாடுகளையே வெளிப்படுத்தி நிற்கின்றது. வடக்கு-கிழக்கில் தேர்தல் பிரசாரங்களில் இலங்கை ஜனாதிபதி, 'முன்மொழிவுகள் பிரதேச சபையிடமிருந்து வர வேண்டும். அந்த முன்மொழிவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது.
ஆனால், நிதியை ஒதுக்குவதற்கு முன்னர், யார் முன்மொழிவை அனுப்புகிறார்கள் என்பது பார்க்கப்படும். மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியின் கைகளில் இருந்தால், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு கண்களை மூடிக்கொண்டு அங்கீகரிக்கப்படும். ஆனால் அது மற்றவர்களின் கைகளில் இருந்தால், அவர்களின் முன்மொழிவு 10 தடவைகளுக்கு மேல் பார்க்கப்படும். அவர்களை நம்ப முடியாது' எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதுவொரு வகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமுகத்திடையே வற்புறுத்தலையும் அச்சுறுத்தலையும் மேற்கொள்வதாகவே அமைகின்றது. இதுதொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசனத்தை தெரிவித்துள்ள போதிலும் ஜனாதிபதி இத்தகைய கருத்தை தொடரும் நிலைமைகளே காணப்படுகின்றது. இரண்டாவது, தேர்தல்களை பாரபட்சமின்றி நீதியான முறையில் நடாத்துவதற்கான பொறுப்பும் சுயாதீனமும் தேர்தல் ஆணைக்குழுவிடம் பாரப்படுத்தப்படுகின்றது.
எனினும் இலங்கையின் பல பாகங்களிலும், குறிப்பாக வடக்கில் தேர்தல் ஆணைக்குழுவின் பாரபட்சமற்ற செயற்பாடுகள் கேள்விக்குறியாகி உள்ளது. வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் பலவற்றினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்ப்பட்டன. சில நீதிமன்றம் சென்று தேர்தல் போட்டிக்கான வாய்ப்பினை பெற்றிருந்தன. மேலும் ஒரு சில கட்சிகள் மீது பாரபட்சமான முடிவினை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணம் மாநகர சபையில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையில் 48 பேரினை உள்ளடக்கிய வேட்பு மனுவில் ஒரு பெண் வேட்பாளரின் சத்தியக்கூற்றில் சமாதான நீதவான் கையெப்பம் இடவில்லை என்பதனை காரணமாகக் கொண்டு தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனு முற்றாக நிராகரிக்கப்பட்டது.
இலங்கை அரசியலமைப்பு
இது தொடர்பில் உயர் நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்த போது எமது வழக்கினை தள்ளுபடி செய்தது. அதே சமயம் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்புமனு வேட்புமனு நிராகரிக்கப்பட்ட அதே காரணத்திற்காக மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்ற பொதுஜன பெரமுனாவின் இரத்திரனபுரியில் உள்ள ஒரு சபையின் வேட்பு ஏற்ககொள்ளுக்கொள்ளப்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வரதராஜா பார்த்தீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையகம் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பையும் அதுசார் தீர்மானத்தையும் பொது கொள்கையாக மேற்கொள்ள தவறியுள்ளது. இது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பாராபட்சமற்ற மற்றும் நீதியான நடைமுறையை கேள்விக்குட்படுத்துவதாக அமைகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் முன்னாள் நகர முதல்வர் ஆவார்.
அவருக்குரிய வெற்றி வாய்ப்புக்களும் அதிகளவில் காணப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வேட்புமனு பாரபட்சமான முறையில் நிராகரிக்கப்ட்டுள்ளமை அரசாங்கத்தின் தலையீடு தொடர்பிலேயே சந்தேகத்தையே உருவாக்கியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல சபைகளில் குறைபாடுகளுடைய தேசிய மக்கள் சக்தியின் விண்ணப்பங்கள் எவ்மறுப்பின்றியும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தேசியம க்கள் சக்தியின் வியூகம் என்பது எதேச்சதிகாரத்துக்கான அடிப்படை தளத்தை வழங்குவதாகவே அமைகின்றது.
குறிப்பாக தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இது தேர்தல் மீதும் தேர்தல் முடிவுகள் மீதும் அவநம்பிக்கையை உருவாக்கும் சூழ்நிலையே உருவாக்கியுள்ளது. 1978ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பு ஏற்கனவே நிறைவேற்றுத்துறையை சர்வதிகார இயல்புகளுக்குள்ளேயே கட்டமைத்துள்ளது.
குறைந்தபட்சம் சுயாதீனமாக தேர்தல் ஆணைக்குழுவினூடாக இடம்பெறும் தேர்தல்களும் ஆட்சி மாற்றங்களுமே குறைந்தபட்சம் இலங்கையின் ஜனநாயக இயல்பை வெளிப்படுத்தி வந்திருந்தது.
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை முழுமையாக இலங்கை ஜனநாயக அரசியல் இயல்பை நிராகரிக்கின்றதா என்ற கேள்வியை அரசியல் அவதானிகளிடையே உருவாக்கியுள்ளது.
அத்துடன் சர்வதேச அனுபவங்களின் பிரதிபலிப்பில் ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையிலான தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் பிரதிபலிப்பை இலங்கையில் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி பரிமாண தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்துகின்றதா என்ற சந்தேகங்களும் பொதுவெளியில் உருவாகியுள்ளது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 26 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
