வடகொரியா செல்லும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் அழைப்பை ஏற்று, ஜூன் 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் வடகொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் சீனத் தலைவர் ஒருவர் வடகொரியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
அண்மைக் காலமாக வடகொரியா ரஷ்யாவுடன் தனது உறவை பலப்படுத்தி வரும் சூழலில், பெய்ஜிங் தனது செல்வாக்கையும் இருதரப்பு உறவுகளையும் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த முக்கிய விஜயத்தை மேற்கொள்கிறது.
இரு நாடுகளின் உறவு
குறிப்பாக, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மீண்டும் வலுப்படுத்த சீனா முயன்று வருகிறது.
வடகொரியா தனது மொத்த வர்த்தகத்தில் 95 சதவீதத்திற்கும் மேலாக சீனாவையே சார்ந்துள்ளது.

ஜனாதிபதி ஷீ ஜின்பிங் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்தப் பயணம் அமையவுள்ளது.
அணுஆயுத உற்பத்தி
ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பிற்கு வடகொரியா தனது படைகளையும் ஆயுதங்களையும் வழங்கி உதவி வரும் நிலையில், இப்பகுதியில் சீனாவின் தந்திரோபாய முக்கியத்துவத்தை நிலைநாட்ட இந்தச் சந்திப்பு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதேவேளையில், வடகொரியாவின் அணுஆயுத உற்பத்திக் கூடங்களை கிம் ஜாங் உன் ஆய்வு செய்து, அணுஆயுதங்களை "அதிவேகமாக" அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளதால், இப்பகுதியில் பிராந்திய மோதல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் சீனா கவனமாக உள்ளது.
இந்தச் சந்திப்பு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் என்று அண்டை நாடான தென்கொரியாவும் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளது.