விமான நிலையப் பகுதிகளில் வெள்ள அபாயத்தை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், பிரவேசப் பாதைகளின் வெள்ள அபாயத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வடிகால் கால்வாய்களை சுத்தம் செய்தல் மற்றும் அவற்றின் கொள்ளளவை மேம்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் அதன் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விமான நிலைய பிரவேச பாதைகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளப்பெருக்கைச் சமாளிப்பதற்கான அவசர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறப்புப் பணி
சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தலைமையில் அண்மையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட ஒரு சிறப்புப் பணிக்குழுவின் தலைமையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடைகளை அகற்றுதல், கால்வாய் நீரோட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் முறையான மழைநீர் வடிகாலை உறுதி செய்தல் ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முயற்சி, விமான நிலைய பிரவேசப் பாதைகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் குறைப்பது மட்டுமல்லாமல், கனமழையின் போது சுற்றியுள்ள சமூகங்கள் எதிர்கொள்ளும் வெள்ள அபாயங்களையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகிய கால நடவடிக்கை
பயணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்காக குறுகிய கால நடவடிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நீண்ட காலத் திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கடுமையான வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளும் திறனை இந்த நடவடிக்கைகள் கணிசமாக மேம்படுத்தும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.