சீனாவின் ஆதிக்கத்தை அடக்க இலங்கை விரையும் இந்திய இராணுவம்: விக்னேஸ்வரன் ஆரூடம்
இலங்கையில் கலவரமொன்று மூண்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. ஏனெனில் சீனா போன்ற பிற வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை அறிந்துகொண்டால் இந்திய இராணுவம் திரும்பிச்செல்ல விரும்பாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் மீண்டும் இனக்கலவரமொன்று வந்தால் அதனைத் தடுப்பதற்கு இந்திய இராணுவம் மீண்டும் நாட்டிற்குள் வரும்.
அவ்வாறு வந்தால் அந்த இராணுவம் நாட்டிலிருந்து மீண்டும் திரும்பிச்செல்லாது.
இனக்கலவரம்
1983 இல் நாட்டில் இடம்பெற்றதைப்போன்ற கலவரம் மீண்டும் உருவாகும் சாத்தியமில்லை. ஏனெனில் அப்போது நிலவிய சூழலுக்கும், தற்போதைய சூழலுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.
போர் சமாதானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன கூறியதைப்போன்று இப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கூறமுடியாது.
மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் கலவரமொன்று உருவானால், அது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும் வெளிநாட்டு உள்ளீடுகளின் செயற்பாடுகள் நாட்டில் தீவிரமடையும் பட்சத்தில் கலவரமொன்று (அமைதியின்மை) உருவாகக்கூடும். அப்போது இந்தியாவின் உதவியை நாடவேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்படும்.
எனவே இலங்கையின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தால் அவர்கள் மீண்டும் திரும்பிச்செல்லமாட்டார்கள்.
ஏனெனில் இலங்கையில் பிற வெளிநாட்டு உள்ளீடுகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்திருப்பதை அறிந்துகொண்டால், அவர்கள் திரும்பிச்செல்ல விரும்பமாட்டார்கள். அதனை ரணில் விக்ரமசிங்கவும் நன்கு அறிவார்.
சீனாவின் ஊடுருவல்
குறிப்பாக இலங்கைக்குள் வரும் வெளிநாட்டு உள்ளீடுகள் என்று பார்த்தால் சீனாவைக் குறிப்பிடலாம். வேறு எந்தெந்த நாடுகள் அவ்வாறு செயற்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. .
இங்கு கலவரம் என்பது நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்தல், பதவியில் உள்ள ஆட்சியாளர்களுக்குப் பதிலாகத் தமக்கு வேண்டியவர்களை ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டுவரல் போன்றவையாகவும் அமையலாம். நாட்டின் தென்பகுதியான அம்பாந்தோட்டையில் சுமார் 15 ஏக்கர் நிலம் சீனாவுக்கு சொந்தமாக இருக்கின்றது.
அதேபோன்று தலைநகர் கொழும்பில் துறைமுகநகரம் சீனாவின் வசமிருக்கின்றது. எனவே நான் மேற்குறிப்பிட்ட விடயங்கள் சாத்தியமாகலாம்.மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அச்சம்பவங்களை ஆதாரமாகக்கொண்டே நான் இதனைக் கூறுகின்றேன்.' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |