பிரான்சில் கைது செய்யப்பட்ட சீனர்கள் - விசாரணையில் கசிந்த இரகசிய தகவல்
பிரான்சின் போர்டோ (Bordeaux) நகருக்கு அருகில் உள்ள கேம்ப்லேன்ஸ்-எட்-மேனாக் (Camblanes-et-Meynac) என்ற சிறிய கிராமத்தில் தங்கியிருந்த இரண்டு சீன இளைஞர்களைப் பிரான்சின் உள்நாட்டு பாதுகாப்பு முகவரகம் கைது செய்துள்ளது.
சுமார் 3,000 பேர் மட்டுமே வசிக்கும் இந்த அமைதியான கிராமத்தில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்த இந்த இளைஞர்கள், திடீரென அந்த வீட்டின் தோட்டத்தில் ஒரு மிகப்பெரிய பாரபோலிக் எண்டெனாவை (Parabolic Antenna) நிறுவினர்.
இணையச்சேவை துண்டிப்பு
இந்த ஆண்டெனா நிறுவப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இணையச் சேவை (Internet) அடிக்கடி துண்டிக்கப்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் வலையமைப்பின் தரவுகளை இடைமறித்துத் திருட இவர்கள் முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள முக்கிய இராணுவத் தளங்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு இடையே பரிமாறப்படும் இரகசியத் தகவல்களைத் திருடி சீனாவுக்கு அனுப்ப இவர்கள் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
சீனர்கள் மீது வழக்குப்பதிவு
"இவர்கள் பொறியியலாளர்கள் என்ற பெயரில் பணி விசா பெற்று பிரான்சிற்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு மிக அருகில் பிரான்சின் ஒரே ஸ்டார்லிங்க் தரைக்கட்டுப்பாட்டு மையம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 27 மற்றும் 29 வயதுடைய குறித்த இரண்டு சீன இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பாரிஸில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியதாக மேலும் இரண்டு சீனர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
பிரான்சின் தென்மேற்குப் பகுதி (South-west France) விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் மையமாகத் திகழ்கிறது.
Airbus, Thales போன்ற பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், முக்கிய இராணுவ விமான தளங்களும் இங்கு இருப்பதால், இப்பகுதி வெளிநாட்டு ஒற்றர்களின் முக்கிய இலக்காக மாறியுள்ளது.