வாஸ்கொடகமா யுகத்தை வேகமாக விழுங்கும் சீனயுகம்
கடந்த ஐந்து நூற்றாண்டுகள் இந்து சமுத்திரத்தை பற்றிப் பிடித்திருந்த வாஸ்கொடகமா யுகத்தை இந்த நூற்றாண்டின் அரைவாசி பகுதிக்குள் சீனயுகம் விழுங்கிவிடும் அபாயம் தோன்றியிருக்கிறது.
சீனயுகத்தின் பட்டுப்பாதையின் இருதயப் பகுதி இந்து சமுத்திரமாகும். இப்பாதையில் கேந்திரப் புள்ளியாக இலங்கைதீவு அமைந்துள்ளது. சீனயுகம் இலங்கைத்தீவில் மையம் கொண்டிருப்பதனால் ஈழத் தமிழினத்தினதும், இந்தியாவினதும் எதிர்காலம் சீன யுகத்தை எதிர்கொள்வதிலேயே தங்கி உள்ளது.
இந்த பூமிப் பந்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தமது வாழ்வுக்காக இயற்கையுடன் இடையூறாது போராடுகின்றன. மனிதனும் ஒரு ஜீவராசி என்ற அடிப்படையில் அவன் இயற்கையுடன் மாத்திரம் அல்ல, மனித சமூகத்திற்கு இடையேயும் ஓயாது போராட வேண்டியுள்ளது.
ஜீவராசிகள் இடத்துக்காக போராடுகின்றன, உணவுக்காக போராடுகின்றன, பாலியல் இனச் சேர்க்கைக்காக போராடுகின்றன. இவை ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவை. ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை.
எனினும் இடத்திற்கான போராட்டமே அதி முக்கியத்துவம் வாய்ந்தது. தனது இருப்பிடத்தை இழந்து எந்த ஜீவராசியும் நிலைபெற முடியாது. அந்த அடிப்படையில் பிராணிகளும் சரி மனிதனும் சரி தன்னுடைய இடத்தினை பாதுகாப்பதற்கான போராட்டமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
சிங்கங்கள் தாம்வாழும் பிரதேசத்துக்குள் மாற்று சிங்கக் கூட்டங்கள் நுழைவதை அனுமதிக்காது. காகங்களும் அப்படித்தான். சிறிய குருவிகளும் தங்கள் கூட்டை நோக்கி புழு பூச்சி பிராணிகள் வருவதையும் அனுமதிக்காது. புழுக்கள்கூட தம்முடைய கூட்டை பாதுகாப்பதற்காகவே போராடும். ஆக ஒவ்வொன்றும் தான் வாழும் சூழலை பாதுகாப்பதற்கு உயிர்கள் அனைத்தும் போராடுகின்றன.
ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
தான்வாழும் சூழலின் எல்லைகளை வகுத்து அவை தமக்கான ஒரு பாதுகாப்பு வளையத்தை வடிவமைத்துக் கொள்கின்றன. இத்தகைய உயிரிகளின் பாதுகாப்பு வளையம்தான் இன்று உலகளாவிய அரசியலில் புவிசார் அரசியல் என அழைக்கப்படுகின்றது.
15 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் பொருளியல் வளர்ச்சியின் அடித்தளத்தில் இருந்துதான் இன்றைய உலக ஒழுங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த உலக ஒழுங்கை கட்டமைத்ததில் கொலம்பஸ், வஸ்கொடகாமா என்ற இருவர் முக்கிய இடம் பெறுகின்றனர். அட்லாண்டிக் சமுத்திரத்தில் பயணம் செய்து அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்ததனால் அமெரிக்க கண்டத்தில் ஒரு கொலம்பஸ் யுகம் தோன்றியது. ஆப்பிரிக்காவை சுற்றி இந்து சமுத்திரத்தில் நுழைந்து வாஸ்கொடகமா இந்தியாவுக்கு சென்றமையால் இந்து சமுத்திரத்தில் ஒரு வஸ்கோடகாமா யுகம் தோன்றியது.
உலகப் போர்
மேற்கு ஐரோப்பியர்களின் யுகமானது இன்றைய அரசியல் பொருளியலின் அடித்தளமாகும். அமெரிக்க கண்டத்தில் கொலம்பஸ் யுகம் 1776 அமெரிக்க சுதந்திரப் போருடன் முடிவுக்கு வந்தது. வாஸ்கொடகமா யுகம் ஐந்து நூற்றாண்டுகள் ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளை கைப்பற்றி அதிகாரம் செலுத்தி தமது பெரும் பொருளியல் சுரண்டலை நடத்தி இரண்டாம் உலகப் போரின் பின் முடிவுக்கு வந்தது .
அமெரிக்க கண்டத்தில் கொலம்பஸ் யுகம் முடிவுக்கு வந்தாலும் மேற்கு ஐரோப்பியர்களின் செல்வாக்கு பசுபிக் அத்லாண்டிக் சமுத்திரங்களுக்கு இடைப்பட்ட வட, தென் அமெரிக்க கண்டங்களில் இருக்கவே செய்தது. அமெரிக்க கண்டம் அமெரிக்கர்களுக்கே உரித்தானது என்பதை வலியுறுத்தி பிரகடனப்படுத்துவதாக 1823 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்கா மொன்றோ கோட்பாட்டின் முன்வைத்ததன் மூலம் முடிவுக்கு வந்தது.
மொன்றோ கோட்பாடு எனப்படுவது வட, தென் அமெரிக்க கண்டங்களும் அட்லாண்டிக், பசுபிக் சமுத்திரங்களும் அமெரிக்காவின் பாதுகாப்பு வளையம் என அது பிரகடனப்படுத்தியது. அந்தப் பிராந்தியத்துக்குள் வெளியரசுகள் ஆக்கிரமிப்பு நோக்கில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதுவே நவீன உலகின் பாதுகாப்பு வளையம். அதாவது புவிசார் அரசியல் என்பதனை சட்டபூர்வமாக பிரகடனப்படுத்திய பிரகடனமாகவும் கொள்ளப்படுகிறது.
புவிசார் அரசியல்
இதற்குப் பின்னர் 1917 ஆம் ஆண்டு புரட்சியின் பின்னர் ரஷ்யா மேற்கொண்ட புவிசார் அரசியல் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை தனது புவிசார் அரசியல் பாதுகாப்பு வளையமாக பிரகடனப்படுத்தியது. அதுவே சோவியத் ஒன்றியமென்ற பேரரசை உருவாக்கவும் செய்தது. இன்று ரஷ்யா, உக்கரையின் யுத்தம் என்பது அந்தப் புவிசார் அரசியல் பாதுகாப்பு வளையத்துக்குள் ஐரோப்பிய நேட்டோ அமைப்பு உட்புகுவதை தடுப்பதற்கானதே. ரஷ்யாவின் நிலைப்பாட்டில் உக்ரைன் என்பது அதனுடைய இருதய நிலம் சார்ந்தது. அதாவது ரஷ்யாவின் புவிசார் அரசியல் பிராந்தியம் ஆகும்.
இவ்வாறுதான் இன்றைய சீனாவின் தாய்வான் தீவு மீதான உரிமை கோரல் என்பது சீனாவின் புவிசார் அரசியலாகும். அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க சீனா முன்வராது. தென் சீனக்கடல் என்பது சீனாவின் பாதுகாப்பு வளையம். அதனை எப்போதும் தனது கட்டுக்குள் வைத்திருக்கவே சீனா முற்படும். இது இயல்பான பேரரசவாத கொள்கை.
இந்த அடிப்படையில்தான் உலகம் தழுவிய அரசியலில் ஒவ்வொரு அரசுகளும் தமது நிலத்துக்கான பாதுகாப்பிற்காக ஓயாது போராடுகின்றன. இதில் ஏனைய சிறிய நாடுகளின் இறைமை, சுதந்திரம் என்ற பேச்சுக்களுக்கு இடமே இல்லை. இங்கு பேரரசுகளின் பாதுகாப்பே முதன்மையிடம் பெறுகிறது. முதற்கட்டம் நிலத்தைப் பாதுகாப்பதும், இரண்டாம் கட்டம் உணவுக்கான போராட்டம்.
இது பொருளீட்டுவதற்கான போராட்டமாகும். யுத்தம் என்பது பொருள் ஈட்டுவதற்காகவே ஆரம்பித்தது. அந்த பொருளீட்டல் என்பது இன்று வர்த்தகமாக மாறி இருக்கிறது. வர்த்தகத்திற்கான போராட்டத்தில் பேரரசுகள் முனைப்பு காட்டுகின்றன. வர்த்தகத்துக்கு பாதகம் ஏற்படுகின்றபோது யுத்தம் தவிர்க்க முடியாத ஒன்று. வர்த்தகத்திற்கான யுத்தம் இன்றைய உலகில் தவிர்க்கப்பட முடியாத ஒன்று.
யுத்தம் எந்த ரூபத்திலும் இடம் பெறலாம். அது படைப்பல பிரியோகமாக இருக்கலாம், படை முஸ்திப்பாக இருக்கலாம், படைக் குவிப்பாக இருக்கலாம், போர் பயிற்சியாக இருக்கலாம், கூட்டு இராணுவ பயிற்சியாக இருக்கலாம், பாதுகாப்பு ஒப்பந்தங்களாக இருக்கலாம், பெரும் நிதி முதலீடுகளாகவும் இருக்கலாம்.
இந்து சமுத்திரம்
இவற்றில் ஏதோ ஒரு வகையில் மறைமுக யுத்தம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அந்த அடிப்படையில்த்தான் இன்று சீனா வர்த்தகத்திற்கான சந்தை வெடிகுண்டு(Market bomb) பெரு யுத்தம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. அந்த யுத்தம் என்பது பட்டுப்பாதை வாணிபம்தான். பட்டுப்பாதைக்கு இந்து சமுத்திரம் இன்றியமையாதது. அந்த இந்து சமுத்திரத்தை தனது கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் தனது பெரும் முதலீடுகளை செய்திருக்கிறது.
அந்த அடிப்படையில்த்தான் இலங்கைத் தீவில் அம்பாந்தோட்டை செயற்கை துறைமுகத்தையும், போட்சிட்டி என்ற கடல் நகரத்தையும் உருவாக்கி இருக்கிறது. இந்து சமுத்திரத்துக்குள் சீனா நுழைவதனால் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகள்தான் இந்து சமுத்திரத்தின் குட்டிவல்லரசான இந்தியாவுக்கு பெருந் தலைடியாகும். சமுத்திரம் என்பது இந்தியாவின் பாதுகாப்பு வலயம். அது இந்தியாவினுடைய புவிசார் அரசியல்.
இந்து சமுத்திர பாதுகாப்பை இந்தியாவினால் உறுதிப்படுத்தாவிட்டால் இந்தியாவுக்கு வாழ்வுமில்லை. வளமும் இல்லை. சுதந்திரத்துக்கு பின்னான இந்தியா தனது பாதுகாப்பு பற்றிய கொள்கையில் எப்போதும் வடக்கு, வட மேற்கு பகுதியின் எல்லைகளையே பெரிதும் கவனத்தில் கொண்டிருந்தது. அது தனது 7526 மையில் நீளமான இந்து சமுத்திர எல்லை பாதுகாப்பை பற்றி பெரிதும் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவுகளை இப்போது யுவான் வாங்-5 (YUAN WANG-5) என்ற சீனச்சொல்லின் பொருள் நீண்டதூர தூரநோக்கு ராஜா-5 உளவுக்கப்பல் வந்ததன் மூலம் இந்தியா உணரத் தொடங்கியிருக்கிறது.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும், அதற்கு சற்று முன்னரும் இஸ்லாமிய உலகத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டு முழு கவனமும் இஸ்லாமிய உலகத்தின் மீதிருந்தபோது அதனைப் பயன்படுத்தி சீனா இந்து சமுத்திரத்தில் பர்மா, பாகிஸ்தான், கெனியா, இலங்கை ஆகியவற்றில் தனது காலை பதித்துவிட்டது.
தற்போது மேற்குலகம் ரஷ்ய-உக்கரையின் யுத்தத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க சீனா தனது YUAN WANG-5 உளவுக்கப்பலை இந்து சமுத்திரத்துக்குள் நுழைந்திருக்கிறது. இந்தக் கப்பல் இலங்கை நோக்கி வருவதை அமெரிக்க - இந்தியா ராஜதந்திரத்தாலோ படைப்பலத்தாலோ தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனாலும் இது இந்தியாவை விழிப்படையச் செய்திருக்கிறது.இது ஒரு காலம் கடந்த விழிப்புத்தான்.
எனினும் இந்து சமுத்திரத்தின் கடல் ஆதிக்கத்தை இன்றைய நிலையிலும் இந்தியாவால் கையாளுவதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளன. சீனக் கப்பலை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு துருப்புச் சிட்டாக ஈழத் தமிழரும் தமிழர் நிலமும் இருந்ததை இந்தியா ஏன் கவனிக்க தவறியது, சீனக் கப்பலை தடுப்பதற்கு இந்தியா ஒரு ராஜதந்திர அறிவிப்பை விடுத்தாலே அதை நிறுத்தியிருக்க முடியும்.
அந்த அறிவிப்பு என்ன என்று பலரும் ஆச்சரியமாக பார்க்கக்கூடும். ஈழத் தமிழர் நிலமும், அரசியல் அபிலாசை சார்ந்தும் இந்தியா ஒரு அறிவிப்பைச் செய்திருந்தால் மறுகணமே மலாக்கா தொடுகடலை தொடாமலேயே YUAN WANG-5 (நீண்டதுார நோக்கு ராஜா-5) கப்பல் சீனாவுக்கு திரும்பிச் சென்றிருக்கும்.
இந்து சமுத்திரத்தில் ஈழத்தமிழரும், ஈழத்தமிழ் மண்ணும் அளவால் சிறியதுதான். ஆனால் இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்டவல்ல பெறுமதியும், சக்தியும் ஈழத் தமிழர்களுக்கு உண்டு. இதுவே ஈழத் தமிழர்களின் பலம். பாக்கு நீரிணை என்பது இந்தியாவையும் ஈழத்தமிழரையும் இணைக்கும் பாலமே தவிர பிரிக்கும் கடல் அல்ல என்றுதான் கொள்ள வேண்டும்.
சீனாவின் நீண்ட காலத் திட்டம் இலங்கையில் காலுான்றி இந்தியாவை சுக்குநுாறாக உடைப்பது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய பகுதிகளை உடைப்பதுதான். நான் இந்தியாவின் வடக்கில் பாடையை இறக்கினால் முப்பது நாட்களுக்குள் தென்முனையை அடைந்து இந்தியாவை முப்பது துண்டுகளாக உடைத்துவிடுவேன் என 1960 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மாவோ சொன்னார்.
இந்த கூற்று மாவோவின் நீண்ட படை நடப்பு (The Long March) அனுபவத்திலிருந்தும், சீனப்பெருஞ்சுவர் மனப்பாங்கிலிருந்தும் வெளிப்பட்டது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கு எதிரான சீனாவின் யுத்தம் என்பது தென்னிந்திய பகுதிகளை குறி வைத்தே நிகழும். அது ஓரிரு ஆண்டுகளில் அல்ல அது சுமார் 50 ஆண்டு கால நீண்ட தூர திட்டமிடலுடனேயே சீனா மேற்கொள்ளும்.
இத்தகைய தென்னிந்திய பகுதிகளை உடைக்கின்ற நீண்டகாலத் திட்டத்தை சீனா நிறைவேற்றுமானால் வட இந்தியா என்றோ, அல்லது இந்தியா என்றோ ஒரு தேசம் இருக்க முடியாது.
அத்தகைய ஒரு தேசம் முதுகெலும்பு முறிக்கப்பட்ட சிங்கமாக பாகிஸ்தானிடமும், பங்களாதேசத்திடமும் அடிவேண்டிய நிலையிலேயே இருக்கும். இவ்வாறான ஒரு யுத்தத்தை சீனா தென்னிந்திய பகுதிகளில் மேற்கொண்டால் அதற்கு எதிராக இந்தியா மேற்கொள்கின்ற யுத்தத்தின் விளைவாக ஈழத்தமிழரும் கூடவே சிங்கள தேசமும் அழியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இலங்கையில் வலுபெற்ற சீன அரசாங்கம்
பெருநாசம் விளைவிக்ககூடிய ஒரு நீண்ட கால திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே சீனா இந்து சமுத்திரத்திலும், இலங்கை தீவிலும் தற்போது காலூன்றி இருக்கிறது. சீனா இலங்கையில் வலுப்பெற்றால், ஈழத்தமிழரும் தமிழ்மண்ணும் இழக்கப்பட்டால் இந்தப் பிராந்தியத்தில் சீனயுகத்தை ஆண்டவன் என்று ஒருவர் இருந்தாலும் அந்த ஆண்டவனாலும் தடுத்து நிறுத்த முடியாது.
எனவே இன்றைய இந்த நிகழ்வுகளை குறுங்கால நிகழ்வுகளாக பார்க்காமல் ஒரு நீண்ட தூர தரிசனத்துடன் அணுகுவதே இன்றைய காலத்தின் தேவையாகும். ஆசிய ஆபிரிக்கா பகுதியின் வாஸ்கொடகமா யுகம் ஐந்து நூற்றாண்டுகள் நிலைபெற்றது. ஆனால் அந்த ஐந்து நூற்றாண்டுகள் அதற்கு முந்தைய இப்பிராந்தியத்தின் இரண்டு லட்சம் ஆண்டுகால மனிதகுல நாகரீகத்தையும், அதன் கட்டுமானத்தையும் மாற்றியமைத்து விட்டது.
ஆனால் இந்து சமுத்திரத்தில் ஒரு சீன யுகம் தோன்றுமேயானால் வாஸ்கொடகமா யுகத்திற்கு இந்தப் பிராந்தியத்தின் அனைத்து கட்டுமானங்களையும் மாற்றி அமைப்பதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் சீனயுகத்துக்கு இன்றைய தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி வெறும் 50 ஆண்டுகளில் உலகம் முழுமையும் சீன யுகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு அடிமை கொள்ளப்பட்டுவிடும் என்பது திண்ணம்.
சீன யுகம் என்பது இந்து சமுத்திரத்துக்கு மாத்திரம் அல்ல உலகளாவிய மனிதகுல நாகரிகத்துக்கு, அரசியலுக்கு, பொருளியலுக்கு மனித வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்து வருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்து சமுத்திரத்தை நோக்கி மையம் கொள்கின்ற சீனயுகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி ஈழத் தமிழரும் இந்தியாவும் தீவிரமாக கருத்திற்க்கொள்ள வேண்டும்.
சீனயுகத்தை எதிர்கொள்வதிற்தான் ஈழத்தமிழரின் வாழ்வும், வளமும் தாங்கியுள்ளது.அவ்வாறே இது இந்திய தேசத்துக்கும் பொருத்தமானது. எனவே இன்றைய சூழலில் சீன யுகத்தை எதிர்கொள்ளவதானது இந்தியா எடுக்கப்போகும் புதிய வெளியுறவுக் கொள்கையிலேயே தங்கியுள்ளது.