குற்றம் நடந்த இடமே செம்மணி.. சர்ச்சையை தோற்றுவிக்கும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்
செம்மணிப் புதைகுழியில் சிறுவர்களின் என்புத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிறுவர்களை எந்தவிதத்திலும் குற்றவாளிகளாகவோ - குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே, நிச்சயமாக குற்றம் நடைபெற்ற இடமாகவே இந்த செம்மணிப் புதைகுழி காணப்படுகின்றது என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் தெரிவித்தார்.
யாழ். செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் நேற்று அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையானார்.
சிறுவர்களின் எண்புத் தொகுதிகள்..
இதனையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
செம்மணிப் புதைகுழியில் 12ஆம் நாள் அகழ்வுப் பணி இடம்பெற்றுள்ளது. மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட புதிய பகுதிகளிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கண்டுபிடிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் நில மட்டத்தில் இருந்து 1/12 அடி தொடக்கம் 2 அடி ஆழத்திலேயே புதைக்கப்படிருக்கின்றன. இது சடலங்களைச் சாதாரணமாக மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாகத் தெரியவில்லை.
மாறாகச் சடலங்கள் சடுதியாகப் புதைக்கப்பட்ட இடம் போல் காணப்படுகின்றது. சிறுவர்களின் என்புத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது மிகப் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றது.
சிறுவர்களை எந்தவிதத்திலும் குற்றவாளிகளாகவோ - குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களாகவோ கருத முடியாது. எனவே, நிச்சயமாக குற்றம் நடைபெற்ற இடமாகவே இந்தப் புதைகுழி காணப்படுகின்றது. இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடன் ஆய்வாளர்கள் செயற்பட்டு வருகிறார்கள்.
தினமும் கண்டெடுக்கப்படும் விடயங்கள் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன. அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள் சுமுகமாக இடம்பெறுகின்றன. அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற அனைவரினதும் ஒத்துழைப்பும் தேவை என குறிப்பிட்டுள்ளார்.