சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்!
பாகம் - 01
சம்பந்தரின் சாவின் செய்திக் கனதியைக் கூட சர்வதேச மட்டத்தில் தவிடுபொடியாக்கி தலைப்புச் செய்திகளாக வலம்வந்துகொண்டிருக்கின்றது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் அர்ச்சுனா என்ற வைத்திய அத்தியட்சகரும் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள்.
கடந்த மாதம் மத்திய சுகாதார அமைச்சின் நியமனத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்படுகின்றார்.
அதுவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையை கவனிப்பதற்காக பதில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் மாகாண சபை நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆதார வைத்தியசாலைக்குரிய பொறுப்பு
அந்த வகையில் நாடு முழுவதும் காணப்பட்ட ஆதார வைத்தியசாலைக்குரிய பொறுப்பு வைத்திய அதிகாரிகளாக 12 பேரினையும் மற்றும் சில பதவிகளுக்கு சிலரையும் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் தற்காலிக இணைப்பாக நியமித்து அனுப்பிவைக்கின்றார்.
இந்த நியமனக் கடிதத்துடன் இராமநாதன் அர்ச்சுனா என்ற வைத்திய அத்தியட்சகர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் கடமையேற்கின்றார்.
அவரது கடமையேற்பு சந்தர்ப்பத்தினை கையளிக்க வேண்டிய பொறுப்பு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் உரிய கடமைகளாக காணப்பட்டன. காரணம் முறையான நியமனத்தில் ஒரு வைத்திய அத்தியட்சகர் அற்றவிடத்து அவ்வைத்தியசாலையும், அதன் ஆளணி நிர்வாக செயற்பாடுகளும் முறையே நேரடி அறிக்கையிடும் அதிகாரியான மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் கிட்டிய நிர்வாக அலுவலகமான பிராந்திய சுகாதாரப்பணிப்பாளருக்கும் உரிய கடமைகள் ஆகும்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் மத்திய அமைச்சில் இருந்து ஒரு வைத்திய அத்தியட்சகர் நியமனம் அனுப்பிவைக்கப்படும்போது அதனை உரிய வகையில் மாகாண சுகாதார அமைச்சும் திணைக்களமும் பிராந்திய அலுவலகமும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கையளிக்கவில்லை என்பது வெளிப்படையாகின்ற தவறாகின்றது.
வைத்தியசாலைக்குரிய பௌதீக வளங்கள் வினைத்திறனான பிரயோகமின்மை, அத்தியாவசிய தேவைகள் கவனிப்பாரற்று இருந்தமை, சேவையை வினைத்திறனுடையதாகும் பணிகள் இடம்பெறாமை முதலிய பல விடயங்கள் புதிய வைத்திய அத்தியட்சகரால் இனங்காணப்பட்டு 20 க்கு மேற்பட்ட கோரிக்கை கடிதங்கள் மத்திய அமைச்சு வரைக்கும் அனுப்பட்டிருந்தன.இவை அனைத்தும் ஆக்கபூர்வமானவைகளாகவே பார்க்கப்பட வேண்டியிருந்தது.
வைத்தியசாலை குறைபாடுகள்
மாகாண நிர்வாகத்தில் கண்காணிப்பில் இருந்த வைத்தியசாலையில் காணப்பட்ட குறைபாடுகள் வெளியே செல்லும் போது அதனை பரிபாலனம் செய்தவர்களது தகமையீனம் என்ற கருத்து பொதுவெளியில் உருவாக ஆரம்பித்தது. அது உண்மையான நிலையாகவும் காணப்பட்டது. இதனை மாகாண நிர்வாம் இரசிக்கவில்லை.
இதன் ஒருபடி மேற்சென்ற புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்களது கடமைகள், கடமை நேரங்கள், விடுமுறைகள் முதலியவற்றை கடுமையாக இறுக்கமாக்க ஆரம்பிக்கின்றார். இங்கே தான் ஆரம்பிக்கின்றது பிரச்சினையின் மூலவேர்.
பௌதீக வளங்களிலும் ஏனைய விடயங்கள் பணியாளர்களது விடயங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது கரிசனை கொள்ளாத வைத்தியர்கள் குழாம் தங்களது விடயங்களில் நெருக்கடிகள் உருவாகும்போது அதற்கு எதிர்வினையாற்ற முற்படுகின்றார்கள்.
தென்பகுதி வைத்தியர்கள் மாதத்தில் மூன்றில் ஒரு நாட்கள் மாத்திரமே பணியாற்றுவது, குறித்த வைத்தியசாலையில் இருக்கும் பொது வைத்திய நிபுணர் 11.30 மணிக்கு பின்னர் குறித்த வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் தனியார் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவது, ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு குறித்த தனியார் வைத்தியசாலையை நாடுமாறு நோயாளர்களை நிர்ப்பந்திப்பது போன்ற பல விடயங்கள் வைத்தியர்களது சுய கடமை ஒழுக்கத்தில் மீறப்பட்டவைகளாக இனங்கண்டு உறுதிப்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை வைத்தியசாலைக்குரிய நேரடி நிர்வாக அதிகாரியான வைத்திய அத்தியட்சகர் மேற்கொண்டிருந்தார்.
வைத்திய அத்தியட்சகரை தவறாக சித்தரித்த விடயங்கள்
இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மக்கள் போராட்டத்தில் ஊடகங்களுக்கு மக்களால் உறுதிசெய்யப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்திலேயே பாதிக்கப்பட்ட வைத்தியர்கள் தங்களுக்கும் இந்த சமூகத்திற்கும் இருக்கும் நல்உறவுகள் மற்றும் அறிமுகங்களை பிரயோகித்து புதிய வைத்திய அத்தியட்சகரிற்கு நெருக்கடிகளை உருவாக்கி பிரயோகிக்க முனைகின்றார்கள்.
அந்த சந்தர்ப்பத்திலேயே தென்மராட்சி அபிவிருத்தி கழகம் மற்றும் நோயாளர் நலன்புரி சங்கம் என்பன இவ்வைத்தியர்களது ஏதுதலிலும் தமது இருப்பையும், நியாயத்தினையும் தக்கவைப்பதற்காக வைத்திய அத்தியட்சகரை தவறானவராக சித்தரிக்க பல விடயங்களை அரங்கேற்றுகின்றார்கள்.
இவை அனைத்தும் அவர் பணிக்கு வந்து 03 நாட்களுக்கும் இடம்பெறுகின்றன. நியமனம் பெற்று வந்த வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் மற்றும் செயலாளர், நோயாளர் நலன்புரி சங்க பொருளாளர், உப செயலாளர் மற்றும் தென்மராட்சியின் பிரபல அச்சக உரிமையாளர் ஆகியோர் வடமாகாண பிரதம செயலாளரை சந்தித்து முறைப்பாட்டினை முன்வைக்கின்றார்கள்.
அதற்கு பதிலளித்த பிரதம செயலாளர் வைத்தியசாலையின் செயற்பாடுகளில் மருந்து வழங்கல்களில் மற்றும் நோயாளர்களுக்குரிய சேவைகள் கிடைக்கவில்லையாயின் தனக்கு முறைப்பாடு மேற்கொள்ளும்படியும், இவ்வாறான பொருத்தமற்ற முறைப்பாடுகளுடன் பொது அமைப்புக்கள் என கூறிக்கொண்டு நிர்வாக நடவடிக்கைகளை இடையூறு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் எனவும் கடிந்து அனுப்பிவைத்திருந்தார்.
வைத்தியர்களின் செயற்பாடுகள்
அன்றைய தினமே தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவராகவும், நோயாளர் நலன்புரிச் சங்க பொருளாளராகவும் இருக்கும் தென்மராட்சியின் பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருடன் சந்தித்து தங்களுக்கு எதிராக பிரதம செயலாளரிடம் முறையிடுமாறு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலைக்குரிய பொது வைத்திய நிபுணரான பெண் வைத்தியர் தங்களை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்து, நோயாளர் நலன்புரி சங்க நிதியில் ஐந்து இலட்சங்களை உங்களது வேலைகளுக்காக எங்களால் வழங்க முடியும் எனவும் தெரிவித்து கலந்துரையாடி வெளியேறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து மூன்று நாட்களில் பிரதம செயலாளரிடம் சென்ற குறித்த குழுவினரும் இன்னும் சிலரும் வடக்கு மாகாண ஆளுநருக்கு இவ் வைத்திய அத்தியட்சகர் தொடர்பான முறைப்பாட்டினை முன்னளித்திருக்கின்றார்கள். அவரும் இது எனது அதிகாரத்திற்கு உட்பட்ட நியமனம் இல்லை எனவும், இது தொடர்பில் சேவை வழங்கல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவ்வாறு இருப்பின் தனக்கு அறியத்தருமாறும் இக்குழுவினை அனுப்பிவைத்திருந்தார்.
இதுவரை வைத்தியசாலைக்குள் இருக்கும் சில வைத்தியர்கள் தங்களது செயற்பாடுகள் தொடர்பில் நியாயப்படுத்த பொது மட்ட அமைப்புக்கள் மற்றும் நலன்புரி சங்கங்களையே கையாண்டுகொண்டிருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினால் 17.5 மில்லியன் உபகரண உதவி செய்யப்பட்டதாகவும் அவை பாவனைக்கு உட்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன் இன்னும் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கி புதிய வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக தென்மராட்சி அபிவிருத்தி கழக செயலாளரின் ஒப்பந்தத்துடன் சமூக ஊடகங்களில் பிரசுரங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
நிதி உதவி
இந்த இடத்தில் 17.5 மில்லியன் நிதி உதவி என்பது தொடர்பில் ஆராய்கையில் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பதனை பற்றி அறியவேண்டிய அவசியம் எல்லோருக்கும் உருவாகின்றது.
தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பது 2019 ஆம் ஆண்டு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் சமூக சேவைகள் சிலவற்றை வழங்குவதினை நோக்கங்களாக கொண்டு சாவகச்சேரி பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் பதிவு செய்யப்பட்டதொரு அமைப்பாகும்.
இது சட்டபூர்வமாக உள்நாட்டு நிதியீட்டங்களில் நன்கொடைகளை திரட்டி பிரதேசத்து மக்களது வாழ்க்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்ட அதிகார வரம்புடையதொரு அமைப்பாகும்.
2019 காலப் பகுதிகளில் தென்மராட்சியின் அரசியல் மையப் புள்ளிகளாக தங்களை உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் காண்பித்த நபர்கள் தங்களது பொதுப்பணிகள் மேற்கொள்வதை உறுதிசெய்வதற்கு சட்டரீதியற்று இயங்கிய அமைப்பினை 2019 பதிவு செய்ததன் ஊடாக தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என வெளிப்படுத்திக்கொள்கின்றார்கள்.
இந்த அமைப்பு அன்றைய காலத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிடியிலேயே இருந்திருந்தது. அதன் பதிவுகள் பின்னாட்களில் இடம்பெற்றிருந்தாலும் இவ் அமைப்பின் பெயராலேயே தமிழ் காங்கிரஸ் சாவகச்சேரி நகரசபையில் கணிசமான பலத்தினை அந்த காலத்தில் பெற்றிருந்தது.
உள்நாட்டு போர்
தென்மராட்சி அபிவிருத்தி கழகம் தொடர்பில் மிக முக்கியமான இன்னொரு விடயமும் இருக்கின்றது. 2009 உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் பிரித்தானியா வாழ் தென்மாரட்சி வைத்தியர் ஒருவர் தனது நிபுணத்துவம் சாராத முதலீடுகளில் ஈட்டும் இலாபங்களை பிரித்தானியாவில் வெள்ளையடிப்பதற்காக தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்ற ஒரு அறக்கட்டளையை பிரித்தானியாவில் பதிவு செய்கின்றார்.
இதன்பின்னர் 2019 காலப்பகுதியில் சாவகச்சேரியில் தென்மாரட்சி அபிவிருத்தி கழகம் என்ற ஒன்றை அரசியல் அபிமானிகளது ஆதரவுடன் ஒரு சமூக சேவைகள் சங்கமாக பதிவு செய்யப்படுகின்றது. தொடர்ந்து தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்பது இரண்டும் ஒரே அலகுதான் என சர்வதேசத்திலும் தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் தான் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாகாண சபையால் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு அமைப்பதற்கு என 430 மில்லியன்கள் ஒதுக்கப்படுகின்றது.
இதில் பாதி நிதிக்கு கட்டடமும், பாதி நிதிக்கு உபகரணங்களும் என தீர்மானிக்கப்பட்டு கட்டடம் அமைக்கப்படுகின்றது. உபகரணக் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அன்றைய மாகாண சபை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினாலும் அன்றைய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர் கேதீஸ்வரனாலும் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றது.
இவ்விடத்தில் தொடர்ச்சியை நிறுத்தி சாவகச்சேரி வைத்தியசாலைக்குரிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்காமைக்கான அடிப்படைக் காரணம் குறித்த ஒதுக்க நிதியானது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் ஆகியோரது திட்டமிட்ட செயற்பாட்டினால் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றியமைத்ததே முதன்மைக் காரணம் என்பதை ஆணித்தரமாக அழுத்திக்கொண்டு, சம நேரத்தில் இவ் வைத்தியசாலையின் குறித்த பிரிவுக்குரிய ஆளணி உருவாக்க கோரிக்கையை மாகாண சுகாதார வைத்திய அதிகாரியான கேதீஸ்வரன் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைத்து முன்னளிக்காத நிலையிலேயே இன்று வரை சாவகச்சேரி வைத்தியசாலை தரம் இரண்டு பீ வகை ஆதார வைத்தியசாலையாக இன்றுவரை தொடர்கின்றது.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு விஸ்தரிப்பு சந்தர்ப்பத்தில் சரியாக இதய சுத்தியுடன் நேர்மையாக கடமையாற்றியிருப்பின் இன்று சாவகச்சேரி வைத்தியசாலை ஏ தர வைத்தியசாலையாக உரிய ஆளணியுடன் தரமுயர்த்தப்பட்டிருக்கும்.
சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்தின் ஊழல் மோசடி
அக்காலகட்டத்தில் தென்மராட்சியை சேர்ந்த ஒரு வைத்தியரே வைத்திய அத்தியட்சகராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணியாற்றியிருந்தார்.இந்த காலத்திலேயே ஊழல்கள் வளர ஆரம்பித்தன என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டியுள்ளது.
குறித்த வைத்திய அத்தியட்சகரது காலத்திலேயே நோயாளர் காவு வண்டியில் தனது காணிகளில் தேங்காய் ஏற்றுவது, வைத்தியசாலை தளபாடங்களை திருடியது, கட்டுமான பொருட்களை திருடியது, பிணக் கூறாய்விற்று கொத்துறொட்டியும், கொக்க கோலா ஒன்றரை லீட்டரும் ஆயிரம் ரூபாவும் என பிறாண்ட் ஆகியிருந்தது. அங்கே ஆரம்பிக்கின்றது.
சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகத்தின் ஊழல் மோசடி. உள்நாட்டு யுத்த காலங்களிலும் அதனை அண்மித்த காலங்களிலும் கடவுள்களாக சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரும், வைத்தியர்களும் மக்களால் பார்க்கப்பட்டதற்கு இன்னும் சான்றாக வைத்தியசாலை முகப்பில் கடவுளுக்கு ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு நகரும் காலகட்டத்தில் பிரித்தானிய தென்மராட்சி அபிவிருத்திகழக தலைவர் வைத்தியரும் சுகாதார வைத்திய பணிப்பாளர் கேதீஸ்வரனும் மிகவும் உற்ற நண்பர்கள்.
இச்சந்தர்ப்பத்திலேயே சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனால் முன்மொழியப்பட்ட கோரிக்கையாக சாவகச்சேரி வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவினை இயங்கவைப்பதற்கு என புலம்பெயர் சமூகங்களில் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினால் நிதி சேகரிக்க ஆரம்பிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையிலேயே பல்வேறு நாடுகளில் தென்மராட்சி அபிவிருத்திக்கு என கூறிக்கொண்டு பெரும் தொகையான நிதியானது சேகரிக்கப்பட்டு பிரித்தானியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.
உச்ச வரி
இவ்வகையில் அனுப்பிவைக்கப்பட்ட பெரும் தொகை நிதிகளும் பிரித்தானியா வாழ் உச்சவரி செலுத்தும் நபர்களால் வைத்தியரின் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றது. அவ்வாறு அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும்போது உச்ச வரி செலுத்துனராக காண்பிக்கப்பட்டு தங்களது பணம் அல்லாத பணத்தினை நன்கொடையளித்தவர்களது ஆண்டுவரிப்புரள்வு 12.5 சதவிகிதத்தால் தள்ளுபடி செய்யப்படுகின்றது.
இவ்வாறு பல மில்லியன் ரூபாக்கள் நன்கொடையளிக்கப்பட்டும் வரிவிலக்களிக்கப்பட்டும் தென்மராட்சி அபிவிருத்தி கழகம் என்ற பிரித்தானிய அறக்கட்டளைக்கு கிடைக்கின்றது.
இதில் தொடர்பற்ற பலர் நன்கொடையாளர்களாக காண்பிக்கப்படுவதுடன் நன்கொடை வழங்கிய உண்மையான நபர் கூட அதனை தன்னுடைய நன்கொடை என அடையாளப்படுத்தும் அளவிற்கு தென்மராட்சி அபிவிருத்தி கழகம் ஒரு பெறுவனவுச் சிட்டடையை ஏனும் வழங்கவில்லை.
ஒரு வகையில் சொல்வதென்றால் மன ஆறுதலுக்கும், திருப்திக்கும் நன்கொடையளித்தவர்கள் தெளிவாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இதனை அறிந்தவர், உணர்ந்தவர் சிலர் அறியாமல் உணராமல் இன்னும் இருப்பவர் பலர்.
இவ்வகையில் பிரித்தானியாவில் திரண்ட நிதியை இலங்கைக்கு வழங்கும் முன்னர் உலகில் மிக சிறப்பானதொரு தொண்டமைப்பினை பிரித்தானியா வாழ் தென்மராட்சி அபிவிருத்தி குழுத்தலைவர் வைத்தியர் தேடுகின்றார். அவரது நட்பு வட்டங்கள் ஊடாக அவுஸ்திரேலியா றொட்றிக் கழகத்தினை அறிந்து அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றார்.
அந்த அமைப்பு தனது செயற்திட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட சில துறை நன்கொடைகளுக்கு கிடைக்கும் நன்கொடைத் தொகையின் ஒரு மடங்கினை தங்களது அமைப்பினால் ஒரு வரப்பிரசாதமாக பயனாளிக்கு வழங்கும் தகைமை உடையது.
அந்த அடிப்படையிலேயே கணக்கு அறிக்கையில் 17.5 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் அவுஸ்திரேலிய றொட்றி கழகத்தினால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடு
இதற்காக பிரித்தானியாவில் இருந்து அவுஸ்திரேலிய றொட்றி கழகத்திற்கு வழங்கப்பட்ட தொகையான இலங்கை ரூபாக்களில் 8.75 மில்லியன் ரூபாக்களாக அமைய வேண்டும்.
இவ் 8.75 மில்லியன் இலங்கை ரூபாக்களுள் பிரித்தானிய நன்கொடை 100 சதவிகிதம்இ 12.5 சதவீத வரிவிலக்களிப்பு மற்றும் பிரித்தானிய அறக்கட்டளை அனுகூலம் 25 சதவீதம் என்பன அடங்கியுள்ளன.
இக்கணிப்பின் அடிப்படையில் நன்கொடை வழங்கப்பட்ட உண்மைத்தொகையானது 6.363 மில்லியன் இலங்கை ரூபாக்கள் (இன்றைய நாணய மதிப்பில் இலங்கிலாந்தின் 16,317 பவுண்ஸ்கள்) மாத்திரமே ஆகும்.
இவ்வாறு கட்டமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்ட பிரித்தானியா வாழ் தென்மராட்சி அபிவிருத்திக் கழக அறக்கட்டளைத் தலைவர் கேதீஸ்வரனுக்கும், யாழ் வைத்திய அத்தியட்சகர் சத்தியமூர்த்திக்கும் பல வரப்பிரசாதங்கள், பயண ஒழுங்குகள் உட்பட்ட பல விடயங்களை தனது அறக்கட்டளையால் வழங்கி திருப்திப்படுத்தி வைத்திருக்கின்றார்.
தொடரும்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 13 July, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.