சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் சர்ச்சைகளின் பின்னணியும்! பாகம் - 03
தொடர்ந்து 05ஆம் திகதியும் வைத்தியர்கள் கடமைக்கு சமூகம் தரவில்லை, பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையில் பத்திரிகையாளர் மாநாடு நடாத்துகின்றார்கள். தங்களது பணி பகிஸ்கரிப்பினை தொழிற்சங்க நடவடிக்கை என அர்த்தப்படுத்துகின்றார்கள்.
ஒரு தொழிற்சங்க நடவடிக்கை
ஒரு தொழிற்சங்க நடவடிக்கையானது தொழில் வழங்குனருக்கும் தொழில் புரிபவருக்கும் இடையேயானதொரு சமரசப் புள்ளியே ஆகும். இங்கே வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக வைத்தியர்கள் பகிஸ்கரிக்கின்றார்கள்.
இது முதலில் மேலதிகாரிக்கு கட்டுப்படாது சேவை வழங்கலைக் குழப்பத்திற்கு உட்படுத்தியமை, மக்களது அத்தியாவசிய சேவையை வழங்காமை, அரச நிர்வாகத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தமை போன்ற விடயங்களின் கீழ் நடவடிக்ககைகள் எடுக்கப்படவேண்டுமே தவிர அதனை ஒரு தொழிற்சங்க நடவடிக்கையாக கருதவேண்டிய அவசியம் இல்லை.
தனி மனித முரண்நிலை
இது ஒரு தனி மனித முரண்நிலைத் தீர்மானமே அன்றி தொழிற்சங்க நடவடிக்கையாக அமையாது. அவ்வாறு இதனை தொழிற்சங்க நடவடிக்கையாக கருதுவதாயின் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு என சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட ஒரு தொழிற்சங்கம் இருந்து அது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாயின் அதனை தொழிற்சங்க நடவடிக்கை எனலாம், இங்கே சாவகச்சேரி வைத்திய சாலையைத் தவிர்ந்த அனைத்து வைத்தியசாலைகளிலும் குறித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் கடமையாற்றியிருக்கின்றார்கள்.
ஆகையால் இது நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காத வைத்தியர்கள் தனிப்பட்ட முறையில் பணியை தவிர்த்து பொதுமக்களது சேவையை முடிக்கியதாகவே கருதப்பட வேண்டும்.
மாகாணத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளராக 14.07.2016 தொடக்கம் 04.09.2022 வரைக்கும் கடமையாற்றிய கேதீஸ்வரனுக்கு இவைகள் தொடர்பில் விடயதான தெளிவு இல்லை என யாரும் கூறிவிடவோ இத் தவறிலிருந்து விடுபட்டுக்கொள்ளவோ முடியாது.
இவ்வாறான நிலையில் 04ஆம் திகதி பிராந்திய வைத்திய அதிகாரிக்கு குறித்த வைத்தியர்கள் அறிக்ககையிட்டதும் இத்துடன் தொடர்பற்ற வேறு வைத்தியர்களை அனுப்பியேனும் குறித்த வைத்தியசாலையின் இயல்பு நிலையை தக்கவைக்கவேண்டிய கடமை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிக்குரியது.
அவர் அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் 04ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து வந்த 05 தினங்களும் மேற்கொண்டு எந்த வைத்தியரையும் கடமைக்கு அனுப்பிவைக்கவில்லை அதற்குரிய நிர்வாக நடவடிக்கைகள் முனைப்புக்காட்டப்பட்டது என்பதனை எண்பிக்கமுடியவில்லை.
இது ஒரு நிர்வாக ரீதியாக பாரதூரமான குற்றமாகும் இதனை தவிர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் பிராந்திய வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்படவில்லை. அன்றையதினம் தொழிற்சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் பிராந்திய வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் மற்றும் மாகாண சுகாதார வைத்திய அதிகாரி பத்திரண ஆகியோர் கருத்துரைக்கின்றார்கள்.
தொழிற்சங்க நடவடிக்கையை தூண்டியமை
நிர்வாக பதவிகளில் கடமையாற்றுபவர்கள் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் சேவைகள் முடங்காதவாறு வினையாற்றவேண்டும். மாறாக அதனை ஊக்குவிப்பதோ அங்கீகரிப்பதோ அவர்களை பணியிடை நீக்கம் செய்வதற்கு உகந்ததொரு தண்டிக்கவேண்டியதொரு குற்றச்சாட்டாக அமையும்.
மறு வகையில் இத் தொழிற்சங்க நடவடிக்கையை தூண்டி வைத்தியசாலையை செயற்பட முடியாது முடக்கிய குற்றச்சாட்டுக்கு வைத்தியர்கள், பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி ஆகியோருடன் மாகாண பணிப்பாளரும் அடங்குகின்றார்.
இப் பிரச்சினை தொடர்பில் இவ்இரு அதிகாரிகளும் பல ஊடக சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஊடக சந்திப்பினை அனுமதி பெற்றுக்கொள்ளாது மேற்கொள்ள முடியாது.
அவ்வாறு மேற்கொள்வதாயின் பிரதம செயலாளரது எழுத்து மூல அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் குறித்த அனுமதிகள் முறையாக பெறப்பட்டிருக்கவில்லை, இவ் விடயத்தின் பாரதூரம் காரணமாக எதிர்வரும் நாட்களில் முற்திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினைப் பெற்று கோவைப்படுத்தி வைத்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
கைதுக் கோரிக்கை
தொடர்ச்சியாக 05ஆம் தினமான ஞாயிற்றுக்கிழமையும் வைத்தியசாலைச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை, மாலை நேரத்தில் மத்திய அரசின் திகதி மற்றும் கையொப்பம் அற்ற ஒரு கடிதத்துடன் பதவியை விட்டு செல்லுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகருக்கு நேரில் சென்று அழுத்தம் தெரிவிக்கின்றார்.
குறித்த கடித்தினை வைத்திய அத்தியட்சகர் ஏற்க மறுக்கின்றார். உடனடியான மாகாண பணிப்பாளர் தான் மேற்கொண்ட பழைய பொலிஸ் முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த வைத்திய அத்தியட்சகரைக் கைதுசெய்து வைத்தியசாலை வளாகத்திற்கு வெளியே கொண்டுசெல்லுமாறு பொலிஸாரிடம் கோருகின்றார்.
சகோதர இனத்தவர்களான மாகாண பணிப்பாளரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைதுக்கு முற்படுகின்றார்கள். அத் தகவலை மக்கள் அறிகின்றார்கள் அப்போதிருந்தே மக்களால் முற்றுகைப்போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.
மறுநாள் மத்திய அரசின் சுகாதார அமைச்சின் அத்தியட்சகர் நியமனத்திற்குரிய மேலதிகச் செயலாளரது கடிதம் வைத்திய அத்தியட்சகருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. வைத்திய அத்தியட்சகர் வெளியேறும் தருணத்தில் பொலிஸாரினால் கைது செய்ய வேண்டும் என பொலிஸ் முறைப்பாட்டாளர்களான பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, அரசமருத்துவ அதிகாரிகள் தொழிற்சங்கம் மற்றும் மாகாண சுகாதார வைத்திய பணிப்பாளர் ஆகியோர் முனைகின்றார்கள்.
இவை அனைத்தும் மக்கள் திரட்சிக்கு முன்னால் செயலற்று போகவே வைத்திய அத்தியட்சகர் வெளியேறுகின்றார். மாகாணப் பணிப்பாளர் வைத்தியசாலையின் கவனிப்பு பணிகளை பாரமேற்கின்றார். குறித்த மாகாண வைத்தியசாலைக்கு ஒருபொருத்தமானவரை தற்காலிகமாக நியமிக்க பரிந்துரைக்கும்வண்ணம் மத்திய சுகாதர அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் ஒருவரால் கோரப்படுகின்றது.
அதற்கு அமைவாக மாகாண வைத்திய பணிப்பாளரால் வைத்தியர் ரஜீவ் முன்மொழியப்படுகின்றார். அவரது கடமையைக் கவனித்தலுக்கான நியமனத்தினை மத்திய அரசு வழங்கி பணிக்கமர்த்தியிருக்கின்றது.
வகைதொகையின்றி திரண்ட மக்கள் மத்தியில் பின்வரும் கேள்விகள் விடைக்காக காத்திருக்கின்றன.
- தமது தனிப்பட்ட வகையில் பணியை பகிஸ்கரித்த வைத்தியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
- பணிப்பகிஸ்கரிப்பிற்கு மாற்று ஒழுங்கு மேற்கொள்ளாத பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
- தனக்கு பகிரப்படாத அதிகாரத்தினை வைத்து மேலும் ஒரு வைத்திய அத்தியட்சகரை நியமித்து குழப்பங்களை உருவாக்கிய மாகாண சுகாதார பணிப்பாளருக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
- மாகாணப்பணிப்பாளர் மத்திய அரசின் நியமனத்தினை மீறி சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்போது அவருடன் வைத்திய அத்தியட்சகர்களாக நியமனம் பெற்ற 11 ஏனைய வைத்திய அத்தியட்சகர்களது நிலை சவாலுக்கு உட்பட்டதா?
- வைத்தியசாலை 05 நாட்கள் சேவை வழங்காமைக்கு மாகாண நிர்வாகம் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
- வைத்திய சாலை நேரங்களில் தனியார் மருத்துவ மனைகளில் நோயாளர்களை பார்வையிடும் வைத்தியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
- வைத்தியர்களை தவறான வழிநடாத்திய சிரேஸ்ட வைத்தியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
- கடமைக்கு சமூகம் தராத 05 தினங்களுக்கும் குறித்த வைத்தியர்களது விடுமுறைகள் சம்பளமற்ற விடுமுறைகளாக கருதப்படுமா?
- சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடும் வைத்தியர் அருச்சுணா மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
- வைத்திய சாலையில் காணப்படும் நன்கொடைகளை பெற்றுக்கொண்ட வைத்திய அத்தியட்சகர்கள் அவற்றை அரச நடைமுறைகளுக்கு அமைவாக பெற்றுக்கொண்டார்களா? அதற்குரிய அனுமதிகளை உரிய அலகுகளில் இருந்து பெற்றிருந்தார்களா?
- பிரித்தானியாவில் இயங்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்திற்கும் சுகாதார அமைச்சிற்கும் இடையே செயற்திட்ட உடன்படிக்கை உள்ளதா? அதனை தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினால் வெளிப்படுத்த முடியுமா?
- பிரித்தானியா தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினர் தனியாக சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்களை குற்றம்சாட்ட முடியுமா?
- தனக்கு கிடைக்கும் நன்கொடைகளைத் தாண்டி குறித்த வைத்திய சாலைச் செயற்திட்டத்திற்கு என நிதி சேகரித்த தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் பிரித்தானியா அவற்றை உரிய பயனாளிக்கு வழங்காது தங்களுடைய கணக்கில் பேணுவதனை நன்கொடையளித்த பெருமக்கள் அனுமதிக்கின்றார்களா?
- இயங்காத ஒரு சத்திரசிகிச்சை கூடத்தினை இயங்குகின்றது என்ற வகையில் அவுஸ்ரேலிய றொட்றிக் கழகத்திற்கு தென்மராட்சி அபிவிருத்தி கழக சாவகச்சேரி நிர்வாகத்தினரும், பிரித்தானிய நிர்வாகத்தினரும் காண்பித்தது நேர்மையான விடயமாகுமா?
- பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்ட ஆதரவு அளித்து காணொளி பதிவுகளையும் கூட்டங்களையும் நடாத்தி நிதி திரட்ட நம்பிக்கையை வழங்கிய சுகாதார வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் மற்றும் வைத்திய அத்தியட்சகர் சத்தியமூர்த்தி உரிய அனுமதிகளை பெற்றதன் அடிப்படையிலேயே இவற்றை மேற்கொண்டிருந்தார்கள்?
- தொழிற்சங்க பிரதிநிதியாக வைத்தியர் மயூரன் சாவகச்சேரி வைத்தியாலை வைத்திய அத்தியட்சகரை தாக்கியமைக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
- மாகாண மற்றும் பிராந்திய வைத்திய அதிகாரிகள் தங்கள் கடமை தொடர்பில் தனியாக பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்ள முடியுமா?
- பிரித்தானியாவில் திரட்டப்பட்ட நிதி தொடர்பில் அரச நிறுவனங்கள் பொறுப்பு கூற முடியுமா?
- தென்மராட்சி அபிவிருத்தி கழகம் பிரித்தானியாவிடம் இருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலை செயற்திட்டத்திற்கென திரட்டிய மொத்த நிதி எவ்வளவு? அதனை எவ்வகையில் உறுதிசெய்வது?
- அதில் கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்கள் உட்பட மிகுதியாக எவ்வளவு தொகை காணப்படுகின்றது? எங்கே காணப்படுகின்றது? எப்போது எவ்வகையில் வைத்தியசாலைக்கு கையளிக்கப்படும்? அதற்குரிய உத்தரவாதத்தினை யாரால் வழங்கமுடியும்?
- பிரித்தானியாவில் இயங்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தினை என்ன காரணத்திற்காக பிரித்தானிய அறக்கட்டளை ஆணையகம் அலுகூலம் பெற முடியாத அமைப்பாக முன்னைய ஆண்டுகளில் பிரகடனம் செய்தது? அதில் நடைபெற்ற முறைகேடுகள் என்ன? இங்கே நிதிச் சலவையாக்கல் நடைமுறைகள் இடம்பெற்றுள்ளனவா?
- தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரியும், தென்மராட்சி அபிவிருத்தி கழகம் பிரித்தானியாவும் தனிப்பட்ட வெவ்வேறு நோக்கங்களை உடைய சங்கமும் அறக்கட்டளையும் ஒன்றையொன்று எவ்வகையில் சார்ந்திருக்கின்றன? இவர்களுக்கிடையேயான ஒப்பந்தம் என்ன? அதனை இலங்கை அரசு அங்கீகரித்திருக்கின்றதா?
- தென்மராட்சி அபிவிருத்தி கழகம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றுக்கொள்வதை சமூக வேவைகள் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி அங்கீகரிக்கின்றதா?
- இவ்விரு அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கும் இலங்கை அரசின்கீழாகவா அல்லது பிரித்தானிய அரசின் கீழாகவா நடவடிக்கை மேற்கொள்ள முடியும்?
- இவர்களது முறையான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த கணக்கறிக்கைகளை சட்டவலுவுடையதாக பகிரங்கமாக வெளிப்படுத்தமுடியுமா?
- தென்மராட்சி அபிவிருத்தி கழகம் சாவகச்சேரியின் செயற்பாடுகள் அரசியல் சார்ந்தும் பக்கச்சார்பு உடையதாகவும் மேற்கொள்ளும் விடயங்கள் நிர்வாகங்களது முடிவில் மேற்கொள்ளப்படுகின்றனவா அல்லது ஒரு சிலரது கைகளில் தங்கியுள்ளனவா?
- தென்மாரட்சி அபிவிருத்தி கழகம் தனது கணக்குகளின் ஊடாக வழங்காத பொருட்களை தாங்கள் வழங்கியதாக காண்பிப்பது சட்டவலுவுடையதா? அதனை காரணம் காட்டி நிர்வாக செயற்பாடுகளை சீரழிப்பது ஏற்புடையதா?
- தென்மராட்சி அபிவிருத்தி கழகங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் உள்வாங்கப்படுமா?
- தென்மராட்சி அபிவிருத்தி கழகம் வைத்தியசாலை நிர்வாகத்தில் தலையிட முடியுமா?
- தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்திற்கும் தமிழ் காங்கிரசிற்கும் இருந்த தொடர்பு என்ன?
- தென்மராட்சி அபிவிருத்தி கழகத்திற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இருக்கும் தொடர்பு என்ன?
- வைத்தியசாலையில் முறையாக செயலாற்றுகைக் கணக்காய்வுகள் உடனடியாக இடம்பெறுமா?
- பொது வெளியில் இவ்வளவு பிரச்சினைகளும் வெளியாகிய பின்னர் இன்றுவரை மாகாணத்தின் மற்றும் மத்திய அரசின் ஆய்வுக்குழுகள் களஆய்வினை மேற்கொள்ளாமைக்கான காரணம் என்ன?
இக் கட்டுரையானது இக்குழப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள், நன்கொடையாளர்கள் ஆகிய தரப்புக்களிடம் ஆழமாக திரட்டிய தகவல்கள், ஆவணங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு பாகம் பாகமாக வெளியிடப்பட்டது.
சிற்சில விடயங்கள் நீதிமன்ற படிகளில் தீர்வைநாடும்போது வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட்டபின்னர் வழக்கு விபரங்கள், வெளிவந்த பிரச்சினைகள், தீர்க்கப்பட்ட விடயங்கள், தீராத குறைகள், தப்பித்த வழிகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இத்தொடர் முடிவுக்கு வரும். அதுவரை, தற்காலிகமாக முற்றுப்பெறுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 18 July, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.