அநுர அரசுக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க விடுத்துள்ள எச்சரிக்கை
அரசு ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில்களே கிடைக்கும் என்றும், அதற்கு மாறாக அடக்குமுறைகளைப் பயன்படுத்தினால் கொடூரமான எதிர்வினைகளே உருவாகும் என்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை நீக்கி, மக்களின் சிவில் உரிமைகளையும் மனிதக் கண்ணியத்தையும் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
இருப்பினும், தற்போது 'அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம்' மற்றும் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்' ஆகியவற்றை அரசு கொண்டுவர முனைவது, கடந்தகால கசப்பான அனுபவங்களை நினைவூட்டி நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடந்த காலத்தில் சந்தித்த ஆயுதக் கிளர்ச்சிகள், பிரிவினைவாதப் போர் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆகியவற்றால் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் இழந்துள்ளது.
போரின் போது பாதுகாப்புப் படையினர் 26 ஆயிரம் பேரும், விடுதலைப் புலிகள் தரப்பில் 23 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர்.
1979 இல் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த நிலையில், ஏற்கனவே நாட்டில் போதுமான குற்றவியல் சட்டங்கள் இருக்கும் போது மீண்டும் புதிய அடக்குமுறைச் சட்டங்கள் எதற்கு என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
முதற்கட்ட விசாரணை
நான் 1989 ஆம் ஆண்டு காசல் வீதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுக் கொழும்புப் பல்கலைக்கழகச் சட்டப்பீட மாணவர்களுடன் இணைந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகக் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டேன்.
மக்களின் துயரங்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து ஆட்சிக்கு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இத்தகைய கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்து புதிய தலைமுறையினரை அச்சுறுத்தக் கூடாது.

கடந்தகாலக் கொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நீதியை உறுதிப்படுத்த வேண்டும்.
அதை விடுத்து, ஜனநாயக வழியில் நடைபெறும் வேலைநிறுத்தங்களையும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களையும் அடக்குமுறையால் எதிர்கொள்ள முனைந்தால் அது மேலும் பாரிய மோதல்களுக்கே வழிவகுக்கும். அரசு உடனடி ஜனநாயக வரம்புகளுக்குள் திரும்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan