சமிந்த விஜேசிறி தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தண்டனைக்கு எதிராக பதுளை மேல்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னை குற்றமற்றவர் என அறிவித்து விடுதலை செய்யுமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ள அவர், அது தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, தன்னை பிணையில் விடுவிக்குமாறும் பதுளை மேல்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வீதியை மறித்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி, அவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளுக்காக, சமிந்த விஜேசிறிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பதுளை மேல்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
2019ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதியை ஒட்டிய ஒரு நாளில், பண்டாரவளை நகரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் வண்டியைச் சட்டவிரோதமாக மறித்து, அவர்களைத் தாக்கி, திட்டி, மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டி சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் சமிந்த விஜேசிறி சார்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டைச் சமர்ப்பித்துள்ளனர்.
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri