தனது ஓய்வு குறித்து தகவல் வெளியிட்ட இலங்கை மகளிர் கிரிக்கட் அணி தலைவி
இந்த வருடம் நடந்து முடிந்த மகளிர் ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியதையடுத்து, அணித்தலைவர் சாமரி அத்தபத்து (Chamari Athapaththu) தனது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது முதல் மகளிர் ஆசிய கிண்ணத்தை வென்றமைக்காக, இலங்கை கிரிக்கெட், சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணிக்கு 100,000 டொலர்களை பரிசு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இறுதிப் போட்டியில் ஏழு முறை செம்பியனான இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இலங்கை மகளிர் அணி தனது முதல் மகளிர் ஆசிய கிண்ணத்தை வென்றது.
முதல் சதம்
இலங்கையின் அதிகபட்ச இலக்கான 165 ஓட்டங்களை துரத்திய அணியின் தலைவி, சாமரி அத்தபத்து 2 ஆறு ஒட்டங்கள் மற்றும் 9 நான்கு ஓட்டங்களுடன் அதிரடியாக 61 ஓட்டங்களை பெற்று, அணியை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
முன்னதாக மலேசியாவுக்கு எதிரான குழுநிலை ஆட்டத்தின் போது, தமது முதல் சதத்தை சாமரி அத்தபத்து பெற்றார்.
இந்தநிலையில் இலங்கையின் ஹர்சிதா சமரவிக்ரம, இந்தியாவுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதற்காக இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை பெற்றார்.
நிச்சயமான கருத்து
போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது, கருத்துரைத்த இலங்கையின் தலைவி, சாமரி அத்தபத்து, மகளிர் போட்டியில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டது இதுவே முதல் முறை என்று கூறினார்.
இதேவேளை தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த அத்தபத்து, அடுத்த 50 ஓவர் மகளிர் உலகக் கிண்ணம் வரை சர்வதேச கிரிக்கெட்டில் தொடரப்போவதாக உறுதியளித்தார்.
முன்னதாக அவர் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து விலகப்போகிறார் என்ற ஊடகங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையிலேயே அவரின் நிச்சயமான கருத்து தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |