மத்திய வங்கி ஆளுநர் செய்துள்ள மோசடி! விமல் அம்பலப்படுத்தும் தகவல்கள்
மத்திய வங்கியால் வெளியிடுடப்படும் திரைசேறி முறிகளை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குடும்பத்தினர் கொள்வனவு செய்து அதிக இலாம் ஈட்டியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
குறுகிய கால முதலீடுகளாகும்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக மத்திய வங்கியால் திரைசேறி முறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை குறுகிய கால முதலீடுகளாகும்.
மத்திய வங்கி ஆளுநரினால் வட்டியும் தீர்மானிக்கப்பட்டு அவரினால் வெளியிடப்படும் திரைசேறி முறிகளை அவரே கொள்வனவும் செய்துள்ளார். அதுவும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களே கொள்வனவு செய்துள்ளனர்.
மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றி சம்பளத்தையும் தங்களுக்கு ஏற்றவாறு அதிகரித்து கொண்டு திரைசேறி முறிகளிலும் இலாபம் ஈட்டுகின்றனர். 2022.5.04, 2024.6.27, 2025.3.18, 2025.08.01 ஆகிய திகதிகளில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பொருளாதார நெருக்கடியின் பின்னரே பெறப்பட்டுள்ளது. நெருக்கடியில் இவர்கள் முன்னேற பார்த்துள்ளனர். இதுவும் நிதி மோசடி தானே? நாடாளுமன்றத்தில் இருப்போர் இது தொடர்பில் கதைப்பதில்லை.
பொருளாதார வீழ்ச்சியைக் கண்டுள்ள நாட்டில் இவ்வாறான நிலைமையை அனுமதிக்க முடியாது. இவ்வாறு சென்றால் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிவரும் என்றார்.



