பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படலாம்...! வெளியான எச்சரிக்கை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் போதுமான தரகுத் தொகையை செலுத்தாததால், எதிர்காலத்தில் பல பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டியிருக்கும் என்று பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் (SLPPTOA) இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய 1.75வீத தரகுப் பணம்(கமிஷன் ) ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிலையங்களை நடத்துவதற்கான செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்று விநியோகஸ்தர்கள் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலை
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிலைமையை விளக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சங்கம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரி கடிதங்களை அனுப்பியுள்ளது.
பெட்ரோலியப் பொருட்கள் அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையில் விற்கப்பட்டாலும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்ற பெட்ரோலிய வழங்குநர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த தரகுப்பணத்தையே செலுத்துகிறது.
இதனால் எரிபொருள் நிலைய உரிமையாளர்களின் இழப்பில் அதிக லாபம் ஈட்டப்படுகிறது என்று விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறைக்கப்பட்ட தரகுப்பணம்
பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு தரகுப்பணம் மட்டுமே வருமான ஆதாரம் என்றும், நிர்வாகச் செலவுகள், ஊழியர் சம்பளம் மற்றும் VAT உள்ளிட்ட அனைத்து நிதிக் கடமைகளையும் அவர்கள் ஈடுகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
குறைக்கப்பட்ட தரகுப்பணம் பல பெட்ரோல் நிலைய வணிகங்களை கடுமையாக பாதித்துள்ளதாக சங்கம் கூறுகிறது.
தற்போதைய தரகுப்பணக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் அல்லது பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் மற்ற பெட்ரோலிய வழங்குநர்கள் செலுத்தும் கட்டணங்களைப் பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



