இலங்கை கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும்: மத்திய வங்கியின் உயர் அதிகாரி தகவல்
தற்போதைய கொள்கைகளை கைவிட்டால் இலங்கை கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை செய்வோம் என இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல்வாதிகள் சூளுரைத்துவரும் நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ள பொருளாதார கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை ஒரளவிற்கு ஸ்திரப்படுத்தியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை
எனினும் பிரதான எதிர்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவும் அவரது கொள்கைகளை விமர்சித்து வருகின்றனர்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக போட்டியிடும் இருவரும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் மாற்றங்களை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போதைய கொள்கைகளை மாற்றியமைக்க நினைத்தால் - அது நினைத்துகூட முடியாத விடயம்,அது சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதற்கு வழிவகுக்கும் என மத்திய வங்கியின் உதவி ஆளுநர் சனட்ரனாத் அமரசேகர தெரிவித்துள்ளார்.
நிதிக்கொள்கைகள்
முழு உலகமும் எங்களை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது. முழு உலகமும் எங்கள் மீது நம்பிக்கை வைப்பதற்காக சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை அவதானித்த வண்ணமுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதிருக்கும் கொள்கை திட்டத்தில் சிறிய மாற்றங்களை செய்யலாம், ஆனால் நிதிக்கொள்கைகள் தொடர்பான நிலைப்பாட்டில், மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் பாரியளவில் பாதையை மாற்றினால் அது இலங்கையை கடுமையாக பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலிற்கு பின்னர் கொள்கை மாற்றங்களை செய்வது குறித்து மத்திய வங்கி சிந்திக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |