போர் நிறுத்தப்படும் வரை இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை இல்லை: லெபனான் சபாநாயகர் திட்டவட்டம்
தெற்கு லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாதவரை, அந்த நாட்டுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முடியாது என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி தெரிவித்துள்ளார்.
லெபனானின் 'அன்-நஹார்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "எந்தவொரு அரசியல் முன்னெடுப்பிற்கும் முன்பாகப் போரை நிறுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் திட்டவட்டம்
மேலும், இஸ்ரேல் தனது குண்டுவீச்சுகளை நிறுத்துவதற்கு உரிய உத்தரவாதம் தராமல் பேச்சுவார்த்தை நடத்துவதை அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

நபி பெர்ரியின் 'அமல்' இயக்கம், இந்த விவகாரத்தில் ஹிஸ்புல்லா அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.
இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகளை இவர்கள் எதிர்ப்பது, அந்நாட்டின் அரசியல் சூழலில் பெரும் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆண்டுகால உள்நாட்டுப் போரைச் சந்தித்த லெபனானில், தற்போது நிலவும் இந்த அரசியல் முரண்பாடுகள் மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுவதை மேலும் சிக்கலாக்கியுள்ளன.