பாட்டலி சம்பிக்க ரணவகவுக்கு எதிரான வழக்கு - ஜெர்மனியிலிருந்து அழைத்து வரப்பட்ட சாட்சி
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவகவுக்கு எதிரான வழக்கின் சாட்சி ஒருவரை ஜெர்மனியிலிருந்து இலங்கைக்கு அழைப்பதற்காக சுமார் 4,50,000 ரூபாய் அரச பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை கோரி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை இன்று(22.10.2026) ரணவக்கவின் சட்டக் குழுவின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஷிரால் லக்திலக சமர்பித்துள்ளார்.
சட்டத்தரணிகளான ராஜிக கொடித்துவக்கு மற்றும் தீக்ண கம்மன்பில ஆகியோரால் சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
சாட்சிகள் கூறிய முக்கிய விடயம்
குறித்த சாட்சி, ஆரம்பத்தில் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கை வர முடியாது எனத் தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார். எனினும் அவரை ஜெர்மனியிலிருந்து இலங்கைக்கு அழைத்து வர விமானக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகளுக்காக சுமார் 4,50,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதன்போது, அந்த செலவை தான் தனிப்பட்ட ரீதியில் ஏற்கவில்லை என்றும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் இந்திக்க என்பவரே அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டதாகவும் சாட்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெளிநாட்டிலுள்ள சாட்சிகளிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காகச் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்றும், பொதுமக்கள் நிதியைப் பயன்படுத்துவதற்கான நிதி விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தச் செலவீனம் அமைந்ததா என்றும் விசாரணை நடத்துமாறு இந்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.