அக்குறணை கோர விபத்து - தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த மற்றுமொரு இளைஞனும் பலி
கண்டி–யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் அக்குறணை 7ஆம் மைல் கல் பகுதியில் சீமெந்து ஏற்றிய கனரக வாகனம் பல வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி கண்டி - மாத்தளை A-9 வீதியில், அக்குறணை 7 ஆம் கட்டை குருகொட சந்தியில் சீமெந்து ஏற்றிய கனரக வாகனம் பல வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்ததோடு, காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக அக்குரணை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கனரக வாகனம் முதலில் மோதிய மோட்டார் சைக்கிள்
இந்நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனம் முதலில் மோதிய மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மாத்தளையைச் சேர்ந்த 25 வயதான இமேஷ் உதய பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த இளைஞரின் மரணத்துடன், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக அதிகரித்துள்ளது.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஐந்து பேர் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.