மகிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு
மகிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கொன்றின் விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் அலுவலகங்களுக்கு 14,000 கேரம் பலகைகளையும் 11,000 டாம் விளையாட்டுப் பலகைகளையும் விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 39 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, சட்டமா அதிபர் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிபதி
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட பிறிதொரு வழக்கில் முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ள இவ்வழக்கு நேற்று(26) கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்று மேல்நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. ஆனால், நீதிபதி புத்திக சி. ராகல நேற்று விடுமுறையில் சென்றிருந்தார். அதன் காரணமாக இவ்வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அங்கு முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிபதி, விசாரணைக்கு முந்திய ஆட்சேபணைகளை கவனத்திற் கொள்வதற்காக இவ்வழக்கை எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.