ரகித ராஜபக்ச கைது விவகாரம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் புதல்வர் சட்டத்தரணி ரகித ராஜபக்ச கைது விவகாரம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ரகித ராஜபக்ச சார்பாக நீதிமன்றத்தில் தாங்கள் எந்தவித பிரதிநிதித்துவத்தையும் செய்யவில்லை என சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, சங்கம் சார்பில் சமர்ப்பிப்புகள் முன்வைக்கப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்று குறிப்பிட்டுள்ளது.
தங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட சட்ட விவகாரங்களில், நீதிமன்றக் கூட்டு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும், அது குறித்து சங்கத்திற்குத் மேல்நடவடிக்கைக்காக அறிக்கை சமர்ப்பிப்பதும் மட்டுமே சட்டத்தரணிகள் சங்கத்தின் வரையறுக்கப்பட்ட பணியாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது சங்கம் சார்பில் முன்னிலையாகி சமர்ப்பிப்புகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு சட்டத்தரணிக்கும் தங்களது செயற்குழு அங்கீகாரம் வழங்கவில்லை எனவும், கைது செய்யப்பட்ட சட்டத்தரணிகளுக்காக ஆஜராவதற்கு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.