அனுராதபுரத்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தெய்வாதீனமாக தடுத்த காவலாளி
அனுராதபுரம் - தஹியாயகம சந்திக்கு அருகில் தொடருந்து கடவை இயங்காமையினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தொடருந்து கடவை காவலாளியின் சாதுரியமான செயலால் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
கெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரஜரட்ட தொடருந்து நேற்று பிற்பகல் அனுராதபுரம் புதிய நகர் தொடருந்து நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த போதே இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
இதன்போது தொடருந்து கடவை இயங்காததன் காரணமாக, மக்களும் வாகனங்களும் தொடருந்து பாதையைக் கடந்து இருபுறமும் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதிக்கு எச்சரிக்கை
எனினும், அந்தச் நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த தொடருந்து கடவை காவலாளி உடனடியாகச் செயற்பட்டு, தொடருந்து சாரதிக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், தொடருந்து பாதையைக் கடந்து கொண்டிருந்த வாகனங்களையும் பொதுமக்களையும் எச்சரித்துள்ளார்.

அதற்கமைய, எந்தவித ஆபத்துமின்றி தொடருந்து பாதையைக் கடப்பதற்கு வாகனங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர், ரயிலில் பாதுகாப்பாக இயக்கப்பட்டுள்ளது.
தொடருந்து கடவைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தொடருந்து கடவை இயங்காமல் போனதாக தொடருந்து கடவை காவலாளி தெரிவித்துள்ளார்.