டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாட்டு திட்டங்கள் : அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகளைக் கடுமையாக்கவும், பெருமளவிலான வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியேற்றவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பெரும்பான்மையாக ஆதரவளித்துள்ளது.
6-3 என்ற கணக்கில் பழமைவாத நீதிபதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம், இந்த வாரம் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு சாதகமாக மூன்று முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கான தற்காலிக அந்தஸ்து
இதன் மூலம், அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிப்பவர்கள் உட்பட பலரை எளிதாக நாடு கடத்தவும் அல்லது நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கவும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புகள் ட்ரம்பின் குடியேற்ற எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி, போர் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஹைட்டி மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருக்கான 'தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை' (TPS) ட்ரம்ப் நிர்வாகம் இரத்து செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிறப்புரிமை குடியுரிமை
மேலும், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் 'மீட்டரிங்' கொள்கையை மீண்டும் செயல்படுத்தவும், வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பும் கிரீன் கார்டு வைத்துள்ள சட்டப்பூர்வ குடியிருப்பாளர்கள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அவர்களைப் போதிய ஆதாரங்களின்றி எல்லையிலேயே திருப்பி அனுப்பவும் அதிகாரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள் இத்தீர்ப்புகளைக் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய இவை அவசியமானவை என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புரிமை குடியுரிமையை இரத்து செய்ய ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு மீதான முக்கிய தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.