வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஆபத்தான 232 குற்றவாளிகள்! பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிவிப்பு
சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்ட 232 சந்தேக நபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளில் 37 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களை கைது செய்து நாட்டிற்குள் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 20 மாதங்களில், சிவப்பு அறிவிப்புகள் மூலம் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மேலும் 35 பேர் சிவப்பு அறிவிப்புகள் இன்றி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை 58 பேர் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்தக் குழுவைத் தவிர, சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்ட மேலும் 96 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட குற்றவாளிகளில் பலர் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, மலேசியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், கனடா, ரஷ்யா, இத்தாலி, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
சொத்துக்களை முடக்கத் திட்டம்
இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் கூடிய விரைவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்படுவார்கள். இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்குகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் தான் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து இந்த போதைப்பொருள் கடத்தல் தொழிலை நடத்தி வருகின்றனர்.
எனவே, அந்தத் தொழில் நடத்துபவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
குற்றவாளிகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டு, இந்தத் தொழிலின் மூலம் அவர்கள் ஈட்டிவரும் சட்டவிரோதச் செல்வத்தைப் பறிமுதல் செய்யத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.