ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கார் விபத்து: சிறுமி உட்பட நால்வர் காயம்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், பிரபல சிறுமிப் பாடகி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (16.11.2026) அதிகாலை சுமார் 4 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் பாடல் நிகழ்ச்சியை நிறைவு செய்துவிட்டு, மீண்டும் பண்டாரவளை பகுதியிலுள்ள தமது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
இதன்போது, காரில் பயணித்த சிறுமிப் பாடகி, அவரது தாய், தந்தை மற்றும் சாரதி ஆகிய நால்வரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி, இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற சிறுவர் பாடல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று, தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகின்றவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கார் கட்டடமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், வாகனம் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் மற்றும் களைப்பு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





