புற்றுநோய் வைத்தியசாலையில் இயந்திரம் செயலிழப்பு: பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்கள்
மகரகம - அபேக்ஷா வைத்தியசாலையில் குழந்தைகளுக்கு கதிரியக்க சிகிச்சை வழங்கும் 'லீனியர் ஆக்ஸிலரேட்டர்' கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் இரண்டு வாரங்களுக்கு மேலாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 15 குழந்தைகளுக்கு தினமும் இந்த இயந்திரம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளொன்றுக்கு பிரசவத்திற்குப் பின் சுமார் 10 குழந்தைகளுக்கு குறித்த இயந்திரம் மூலம் சிகிச்சை வழங்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவர் கதிர்வீச்சு சிகிச்சை
குறித்த கதிர்வீச்சு சிகிச்சையானது வீரியம் மிக்க செல்களை அழிக்க அதிக ஆற்றல் கற்றைகளைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
சில புற்றுநோய் அல்லாத கட்டிகளுக்கு சிகிச்சையளிக்கவும் மருத்துவர்கள் கதிர்வீச்சு சிகிச்சையையும் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில் சிறுவர் கதிர்வீச்சு சிகிச்சை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தவிர மேலும் பல புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.