கனடிய பொலிஸ் அதிகாரியின் இலங்கை விஜயம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
கனடிய பொலிஸ் அதிகாரியின் இலங்கை விஜயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
பேச்சுவார்த்தை
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை நிசான் துரையப்பா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
தேசபந்து தென்னக்கோன் சித்திரவதைகளில் தொடர்புபட்டிருப்பதாக இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு வாரத்தின் பின்னர் துரைப்பா இந்த விஜயத்தை மேற்கொண்டு இருந்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிசான் துரையப்பாவின் இலங்கை விஜயம் தொடர்பில் விசாரணையை நடத்துமாறு கனடிய பொலிஸ் சுயாதீன மீளாய்வு அலுவலகத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற இலங்கை விஜயத்தின் போது நிசான் துரையப்பா சீருடை அணிந்திருந்தமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிசான் துரையப்பாவின் இலங்கை விஜயம் மற்றும் அவர் சீருடை அணிந்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்திய விடயங்கள் என்பன குறித்த புகைப்படங்களை இலங்கை அரசாங்கம் பிரச்சார நோக்கில் பயன்படுத்தும் என நாடு கடந்த தமிழீழ அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
குற்ற செயல்கள்
இலங்கை அரசாங்கம் இன அழிப்பில் ஈடுபட்டதாகவும் போர் குற்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இறுதி கட்டப் போரின் போது பல்வேறு குற்ற செயல்கள் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய பொலிஸாரின் சீருடை அணிந்து அரசாங்கத்தின் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டமை தவறானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் உரிய விசாரணையை நடத்தப்பட வேண்டும் என கனடாவிடம் நாடு கடந்த தமிழில் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.