பெலியத்தையில் ஐவர் படுகொலை விவகாரம்: பிரதான சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம்
பெலியத்தையில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியவர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் லயன் ரெஜிமண்ட் படைப்பிரிவில் கடமைப்புரிந்த இராணுவ மேஜர் நிஷாந்த டயஸ் என்பவரே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை முழுமையாக வழிநடத்தியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் இராணுவத்தில் தொடர்ச்சியான முறைகேடுகளில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து இலங்கை இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும் விசாரணைகளின் பின்னர் புலனாய்வு தகவல்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்
அத்துடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை வீரர், சம்பவம் இடம்பெற்று 7 நாட்களுக்குப் பிறகு டுபாய் நோக்கி சென்றுள்ளார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக கருதப்படும் துப்பாக்கிதாரியின் மனைவி வெயங்கொடை - பல்லேவெல பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி தங்காலை நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக டிஃபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |