சிறீதரன் எம்பியை சந்தித்த இலங்கைக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகர்
கனடா நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்ட்டின் இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழர் தாயக பகுதியின் நிகழ்கால அரசியல் நிலவரங்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள், திட்டமிட்ட தமிழர் நில அபகரிப்புக்கள், கிபுல்ஓயா திட்டம் போன்றவற்றின் ஊடாக தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்கள் கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு சிறீதரன் எம்பியால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சிறீதரன் எம்பி
புதிய உயர்ஸ்தானிகராக வருகை தந்திருந்த இஸபெல்லா மார்ட்டின் மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக மேலதிக விடயங்களையும் ஆர்வமாக கேட்டறிந்துகொண்டார்.

இந்த சந்திப்பின் போது போரின் பின்னர் தமிழர் பகுதிகளில் அடாத்தாக முளைத்துள்ள புதிய விகாரைகள், அரசியல் கைதிகள் தொடர்பான சில விடயங்களை ஆவணங்களுடன் புதிய உயர்ஸ்தானிகருக்கு சிறீதரன் எம்பி தெளிவுபடுத்தியிருந்தார்.
சந்திப்பின் போது வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் வகையில் ஒரு நினைவுச்சின்னமும் உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்ட்டினுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

