இலங்கையின் முக்கிய துறைகளுக்கு கனடாவின் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு உதவி
இலங்கையின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் எரிசக்தித் துறைகளுக்கு கனடாவின் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு உதவிகளை வழங்குவது தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று நேற்று(28.08.2026) நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
புதிய மேம்பாட்டுத் திட்டங்கள்
இந்தச் சந்திப்பில், இலங்கையின் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், துறைமுகத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள 61 எண்ணெய் தொட்டிகளில் 24 தொட்டிகளை மீள பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் சேமிப்பு மற்றும் கடல்வழி எரிபொருள் விநியோக வசதிகளை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம், பயிற்சி மற்றும் நவீன உபகரணங்களை வழங்கவும், வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் கனடா தயாராக இருப்பதாக உயர் ஸ்தானிகர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.