தாயென நினைத்து சிலையை சுற்றித்திரிந்த இளம் காட்டு யானை! பதிவான நெகிழ்ச்சி சம்பவம்
பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலை அருகே நேற்று காலை காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமானப்பணியில் உள்ள அந்த யானை சிலைக்கு அருகில் வந்த இளம் காட்டு யானை ஒன்று, அங்கிருந்து நகர மறுத்து பல மணி நேரமாகச் சிலையைச் சுற்றிச்சுற்றி வந்துள்ளது.
பரிதாபமான நடத்தை
கூட்டத்திலிருந்தோ அல்லது தாயிடமிருந்தோ பிரிந்து வழி தவறி வந்த இந்த இளம் யானை, தூரத்தில் தெரிந்த அந்த யானையின் உருவத்தைத் தனது தாய் என்றோ அல்லது தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு யானை என்றோ தவறாக நினைத்து அருகில் வந்து நின்றதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

யானையின் இந்த விசித்திரமான மற்றும் பரிதாபமான நடத்தையை கண்ட அப்பகுதி மக்களும் அவ்வழியாக சென்ற பயணிகளும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர்.